அமீரக செய்திகள்

கைவிடப்பட்ட துபாயின் லட்சிய திட்டமான ‘பாம் தேரா ஐலேண்ட்’.. என்ன காரணம்? அதன் தற்போதைய நிலை என்ன? விரிவான தகவல்கள்..!!

துபாயில் உலகின் மிக உயரமான வானுயர் கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை உருவாக்குவதற்கு முன்பே, மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை பாம் ஐலேண்டுகளுடன் உலக வரைபடத்தில் துபாயை நிலை நிறுத்த 2001 ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டது. பனை மரங்களைப் போன்ற வடிவில் கடலுக்குள் செயற்கையாக, பாம் ஐலேண்ட் டெவலப்பரான நக்கீல் தலைமையில் மனிதனால் உருவாக்க திட்டமிடப்பட்ட இந்த பாம் ஐலேண்டுகள், துபாயின் ஒரு பெரிய லட்சிய திட்டமாக இருந்தது என்றும் கூறலாம்.

துபாயின் இந்த லட்சியத் திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டு தற்போது உலகின் மிகவும் ஆடம்பரமான வசதிகள் கொண்ட பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் உலகின் மிகவும் விலையுயர்ந்த சொகுசு பங்களாக்கள் ஆகியவற்றின் இருப்பிடமாக இருக்கும் பாம் ஜுமேராவை (Palm Jumeirah) பற்றியும், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கட்டுமானம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பாம் ஜெபல் அலி (Palm Jebel Ali) பற்றியும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஆனால், இந்த இரண்டு பாம் ஐலேண்டுகள் மட்டுமில்லாமல், 2004 ஆம் ஆண்டில் மற்றொரு பாம் ஐலேண்ட் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான கட்டுமானப்பணிகளும் தொடங்கப்பட்டு பின்னர் அந்த திட்டம் நக்கீல் டெவலப்பரால் கிடப்பில் போடப்பட்டதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் என்பது தெரியவில்லை..

கடந்த 2004 ம் ஆண்டில் நக்கீல் டெவலப்பரால் அறிவிக்கப்பட்ட இந்த பாம் தேரா (Palm Deira) ஐலேண்ட் தான், துபாயின் மூன்றாவது மற்றும் மிகப்பெரிய பாம் ஐலேண்ட் ஆகும். இதன் கட்டுமானம் முதலில் 2015 ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கான காரணம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் ஆரம்ப கால நிகழ்வுகளையும் சற்று தெரிந்து கொள்ளலாம்.

பாம் ஐலேண்ட் திட்டம்:

2000 ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உலகளவில் துபாயை ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பர இடமாக நிலைநிறுத்த, துபாயின் கடற்கரை பகுதிகளான ஜூமேரா, தேரா மற்றும் ஜெபல் அலி பகுதிகளில் பாம் மரத்தின் வடிவிலான செயற்கைத் தீவுகளை உருவாக்கும் பணியில் அப்போது தனியார் நிறுவனமாக செயல்பட்ட நக்கீல் நிறுவனம் முனைப்புடன் இருந்தது.

நக்கீல் நிறுவனத்தின் விடாமுயற்சியின் விளைவாக, 2001 இல் பாம் ஜுமேரா மற்றும் 2002 இல் பாம் ஜெபல் அலியின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து சரியாக ஒரு வருடம் கழித்து, மூன்றாவதாக பாம் தேரா ஐலேண்டை உருவாக்குவதற்கான திட்டங்களும் தொடங்கப்பட்டது.

அதன்படி, தேரா கடற்கரையை ஒட்டி 49 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில், நாட்டிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கை ஐலேண்டாக இதனை உருவாக்க வேலைகளும் தொடங்கப்பட்டது. மேலும் தேரா கார்னிச் பகுதியில் இருந்து கடலுக்குள் நீட்டிக்க திட்டமிடப்பட்ட இந்த ஐலேண்டிற்கு, பாம் ஜுமேராவை விடவும் 60 சதவீதம் கூடுதல் மணல் தேவைப்பட்டுள்ளது.

கிடப்பில் போடப்பட்ட பாம் தேரா:

2001 இல் தொடங்கப்பட்ட பாம் ஜுமேராவின் பணி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 2007 இல் முடிக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை ஐலேண்டில் குடியேறத் தொடங்கினர். அது நிறைவடைந்த சமயத்தில், பாம் ஜூமேராவை விட இரு மடங்கு பெரிய தீவான பாம் ஜெபல் அலியின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருந்தது.

ஆனால், 2004 ல் தொடங்கப்பட்ட பாம் தேராவின் கட்டுமானப் பணிகள் அந்த சமயத்தில் வெறும் கால் பகுதி மட்டுமே முடிவடைந்து இருந்தது. அதாவது 2007-2008-இல் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் துபாயும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக, பாம் ஜெபல் அலி மற்றும் பாம் தேராவின் பணிகள் பாதியிலேயே முழுவதுமாக நிறுத்தப்பட்டு அந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.

பாம் தேராவின் தற்போதைய நிலை:

பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2007ல் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட பின்னர், பாம் தேரா திட்டம் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் செயலற்ற நிலையில் இருந்துள்ளது. அதன் பிறகு கைவிடப்பட்ட இந்த பாம் தேரா திட்டத்தை, நக்கீல் நிறுவனம் 2013ம் ஆண்டு தேரா ஐலேண்ட்ஸ் என மறுபெயரிட்டு அதற்கான பணிகளையும் தொடங்க ஆரம்பித்தது.

அதாவது, பனைமர வடிவத்தில் தீவை உருவாக்கும் திட்டத்தில் இருந்து விலகி, மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்று தனித் தீவுகளை உள்ளடக்கியதாக தேரா தீவுகள் (Deira Islands) திட்டமிடப்பட்டது. கூடவே, அங்கு ஒரு இரவு நேர சூக் மற்றும் ஒரு பெரிய அளவிலான தேரா மால் (Deira Mall) ஆகியவற்றை கட்டவும் நக்கீல் திட்டமிட்டது. இதனையடுத்து, 2004ல் தொடங்கப்பட்ட பாம் தேரா பின்னர் தேரா தீவுகள் என மாற்றப்பட்டு இறுதியாக 2022ம் ஆண்டில் துபாய் தீவுகள் (Dubai Islands) என மீண்டும் மறுபெயரிடப்பட்டது.

பல வருடங்களுக்கு பிறகு கட்டிமுடிக்கப்பட்ட இந்த துபாய் ஐலேண்டில் ஏற்கனவே குடியிருப்பு கட்டிடங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு Souk Al Marfa எனும் மிகப்பெரிய சூக்கும் பொதுமக்களுக்காக பயண்பாட்டில் உள்ளது. அத்துடன் Centara Mirage Beach Resort ம் இங்கே அமைந்துள்ள பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.

தற்போது நடந்துவரும் அடுத்தகட்ட பணிகளும் முழுமையாக முடிந்தவுடன், துபாய் தீவுகள் விரைவில் மொத்தம் 17 சதுர கி.மீ பரப்பளவில் ஐந்து தீவுகளைக் கொண்ட ஒரு பெரிய ஐலேண்டாக இருக்கும். மேலும், இது 80 ஹோட்டல்கள், பூங்காக்கள் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானத்தின் இருப்பிடமாகவும் இருக்கும். அத்துடன் இங்கு கட்டப்படவிருக்கும் தேரா மால் நகரின் மிகப்பெரிய மால்களில் ஒன்றாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!