வளைகுடா செய்திகள்

ஓமானின் புதிய தொழிலாளர் சட்டம்: கடைபிடிக்க வேண்டிய 15 முக்கியமான அம்சங்களை வெளியிட்ட அமைச்சகம்..!!

ஓமானில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தை கடந்த வாரம் ஓமான் அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு புதிய அம்சங்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான 15 அம்சங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, அவற்றை கீழே காண்போம்.

1) திருத்தப்பட்ட புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, உள்நாட்டில் வேலை வாய்ப்பு என்பது ஓமான் நாட்டு குடிமக்களுக்கே உள்ளார்ந்த உரிமை ஆகும்.

2) ஒவ்வொரு ஸ்தாபனமும் அதன் உள்ளூர்மயமாக்கல் கொள்கையினை கருத்தில் கொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் ஓமானியர்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதில் ஓமான் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் சம்பளம், அவர்களின் பாலினம் மற்றும் அனைத்து தகவல்களும் அடங்கிய விரிவான அறிக்கை இருக்க வேண்டும். வேலைக்கான காலியிடங்கள் இருந்தால் அதனையும் அதிகாரபூர்வமான தளத்தில் அப்டேட் செய்ய வேண்டும்.

3) நிறுவனத்தின் மிக உயரிய பொறுப்புகள் ஓமன் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பொழுது அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை அந்த வேலையில் திறம்பட செயல்படும் வகையில் பணியமர்த்த வேண்டும்.

4) பணிபுரியும் பெண்களுக்கான சலுகைகளில் குழந்தை பராமரிப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் மற்றும் 98 நாள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். மேலும், குழந்தை பராமரிப்புக்காக ஒரு வருடம் வரை ஊதியம் இல்லாத விடுப்புக் காலத்தைப் பெற அனுமதிக்கிறது.

5) ஆண்களுக்கும் மனைவிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ஏழு நாள் மகப்பேறு விடுப்பு மற்றும் குடும்பத்தில் நோயாளி யாரேனும் இருப்பின் அவர்களை பராமரித்துக் கொள்ள 15 நாள் விடுப்பு ஆகியவை வழங்கப்படும். கூடுதலாக மெடிக்கல் லீவுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது

6) பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25 ஐத் தாண்டிய நிறுவனங்களில் அவர்களுக்கு என பிரத்யேக ஓய்வு இடத்தை வழங்கவும் சட்டம் முதலாளிகளை கட்டாயப்படுத்துகிறது.

7) ஒரு தொழிலாளி மற்றொரு முதலாளியிடம் தற்காலிகமாக வேலை செய்ய முதலாளியை சட்டம் அனுமதிக்கிறது. இது வணிக நடவடிக்கைகளை எளிதாக்கும் மற்றும் முதலாளிக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான செலவைக் குறைக்கும்.

8) ஒரு தொழிலாளி நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தித்திறனை அடையத் தவறினால், ஒப்பந்தத்தை நிறுத்த முதலாளிக்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறது. திறனற்ற பகுதிகள் குறித்து பணியாளருக்கு அறிவித்து, அதைச் சரிசெய்வதற்கு ஆறு மாதங்களுக்குக் குறையாமல் போதுமான கால அவகாசம் வழங்கிய பிறகு இது அனுமதிக்கப்படுகிறது. இந்த விதி ஸ்தாபனத்திற்குள் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் தொழிலாளர்களிடையே போட்டியை ஊக்குவிக்கும்.

9) ‘ஓமானியமயமாக்கல்’ கொள்கையின்படி, ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஓமன் மக்களை பணி அமர்த்தியபின் மீதமுள்ள வேலை வாய்ப்புகளை வெளிநாட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் வெளிநாட்டு ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு சட்டம் அனுமதிக்கிறது.

10) முதலாளி தனது நிறுவனத்தில் தொழிலாளர்களின் திறனை சரிபார்க்க செயல்திறன் மதிப்பீட்டு முறையை (performance appraisal system)நிறுவ வேண்டும்.

11) தொழிலாளியின் கோரிக்கையின் பேரில், ஊதியம் இல்லாமல் சிறப்பு விடுப்பு வழங்குவது அனுமதிக்கப்படுகிறது.

12) இரவு நேரங்களில் வேலை செய்ய முடியாது என்று நிரூபிக்கப்பட்டால், பணியாளரை பகல் நேரத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

13) ஓய்வு நேரத்தை சேர்க்காமல் தினசரி 8 மணி நேரம் வேலை வழங்கப்பட வேண்டும்.

14) தொழிலாளிகளின் உரிமைகளில் பாரபட்சம் பார்க்காமல் அவர்களுக்கான வேலை ஒதுக்கப்பட வேண்டும்.

15) ஒவ்வொரு துறையிலும் வேலையின் தன்மைகளுக்கு ஏற்ப வேலைகளை திட்டமிட்டு அட்டவணை படுத்த வேண்டும். இந்த செயல்முறை தொழிலாளர்களுக்கு வேலையினை பிரித்துக் கொடுக்க எளிதாக இருக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!