ADVERTISEMENT

இரண்டே வாரத்தில் 38 ஆயிரம் தினார்கள் அபராதம் வசூல்..!! போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கும் குவைத் அரசு…

Published: 21 Jul 2023, 8:43 PM |
Updated: 21 Jul 2023, 9:06 PM |
Posted By: admin

குவைத் நாட்டில், போக்குவரத்து அபராதம் செலுத்தாமல் மற்ற வளைகுடா நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாது என உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த முடிவானது நடைமுறைக்கு வந்த பிறகு இதுவரை 38 ஆயிரம் தினார்கள் வசூலிக்கப்பட்டுள்ளதாக குவைத்தின் பொது போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், போக்குவரத்து மீறல்கள் மற்றும் அபராதத்தை திருப்பி செலுத்தாதற்காக தினமும் வளைகுடா நாட்டைச் சேர்ந்த 21 குடிமக்கள் தோராயமாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட நிலுவையில் உள்ள அபராதம் செலுத்தப்படும் வரை, அவர்கள் தங்கள் வாகனங்களுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குவைத் நாட்டின் போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டின் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல்-கலீத், போக்குவரத்து விதி மீறல்களுக்காக அபராதங்களை வசூலிக்கும் முடிவினை இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதன் அடிப்படையில், போக்குவரத்து துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் யூசுப்பின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டமானது திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்று போக்குவரத்து வட்டாரங்களை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

எனவே, பாரபட்சமில்லாமல் எல்லா வாகனங்களும் தீவிர மேற்பார்வையின் கீழ், கண்காணிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இனி எல்லைகளை கடக்கும் இடங்களில் போக்குவரத்து அபராதங்களை வசூலிக்க 24 மணி நேரமும் தனி பிரிவுகளை அமைக்க மேஜர் ஜெனரல் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம், போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரச்சாரங்களின் விளைவாக 35,000 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 46 கவனக்குறைவான வாகன ஓட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 64 வாகனங்கள் மற்றும் 54 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில், 31 சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எனவே, குவைத் நாடு மேற்கொண்டு வரும் கடுமையான வாகன விதிகளின் காரணமாக இனிவரும் காலங்களில் விதிமீறல்கள் கணிசமாக குறையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.