அமீரக செய்திகள்

துபாயில் இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறையை குளு குளு ஏசியில் கழிக்க சூப்பரான ஐந்து இடங்கள்..!

துபாயில் கோடை வெப்பத்தின் தாக்கமானது தற்பொழுது அதிகமாக உள்ளது. அதே சமயம் குழந்தைகளுக்கும் இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை வரவிருப்பதால், குடியிருப்பாளர்களும், பார்வையாளர்களும் விடுமுறையினையும் கோடை காலத்தை குளிர்ச்சியாக கழிக்கும் வண்ணமும் பல பொழுதுபோக்கு அம்சம் உள்ள இடங்களை துபாய் பிரச்சாரம் செய்து வருகின்றது.

பொதுமக்களை கவரும் வகையில், சமீபத்தில் #DubaiDestinations என்ற வசீகரிக்கும் டேக் உடன் இந்த கோடைகால பிரச்சாரம் தொடங்கியுள்ளது. பிராண்ட் துபாயால் செயல்படுத்தப்பட்டு ஆகஸ்ட் இறுதி வரை இயங்கும் இந்த பிரச்சாரமானது, மக்கள் கோடையின் வெப்பம் தாக்காமல் கழிக்கும் வண்ணம் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது. இதனடிப்படையில் துபாயில் உள்ள முக்கியமான 5 பொழுதுபோக்கு இடங்களில் சிறப்பம்சங்கள், அவற்றைப் பற்றிய தகவல்களை சற்று விரிவாக பார்க்கலாம்.

மால் ஹாப்பிங் (Mall hopping)

உலகில் உள்ள விதவிதமான பொருட்களை ஒரே இடத்தில், சிறந்ததாக வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு துபாய் ஒரு சிறந்த இடமாகும். முக்கியமாக துபாயில் உள்ள மால்களில் நீங்கள் விரும்பும் ஆடம்பர பிராண்டுகள், வகை வகையான உணவுகள், குழந்தைகள் விளையாடுவதற்கான வேடிக்கை செயல்பாடுகள் ஆகியவை நிறைந்து காணப்படும்.

அதிலும் மிகவும் முக்கியமான ஒன்று உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களுள் ஒன்றான ‘துபாய் மால்’. உங்களுக்கு ஷாப்பிங் சென்றதற்கான அனுபவத்தை தராமல் புதிதாக ஒரு உலகிற்குள் நுழைந்ததற்கான அனுபவத்தை இந்த மால் தரவல்லது.

இங்கே பார்வையாளர்கள் பனிச்சறுக்கு வளையம் (ice-skating rink), டைனோசர் எலும்புக்கூடு (marvel at the dinosaur skeleton) மற்றும் நீருக்கடியில் உள்ள அக்வாரியம் மற்றும் மிருக காட்சி சாலை (Dubai Aquarium and Underwater Zoo) ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் ஒரு பெரிய கண்ணாடி பேனல் மூலம் கடல் வாழ் உயிரினங்களை ரசிப்பதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் இந்த மாலிற்கு சென்றால் மிகவும் குதூகலமடைவார்கள்.

அட்வென்ச்சர் பார்க் (Adventure parks)


இந்த கோடை காலத்திலும், விறுவிறுப்பாக, த்ரில்லான அனுபவத்தை விரும்புவர்களுக்கு IMG வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சர் சரியான இடம். இது உலகின் மிகப்பெரிய உட்புற தீம் பார்க் ஆகும். அனைத்து வயதினரும் ரசித்து விளையாடும் வகையில் இந்த பார்க்கானது ரைடுகளை கொண்டுள்ளது. பார்வையாளர்கள் கோடை காலத்திற்கு ஏற்ப அனுபவிக்கும் வகையில் ரைடுகள், திரில்லான ரைடுகள் மற்றும் பல புது விதமான அனுபவங்களை இந்த அட்வென்ச்சர் பார்க்கில் பெற முடியும்.

ஸ்கீ துபாய் (Ski Dubai)

துபாயில் சுற்றி பார்க்க வேண்டிய மற்றொரு இடம் ஸ்கீ துபாய் ஆகும். இது மால் ஆஃப் தி எமிரேட்ஸில் உள்ள ஒரு சிறந்த பொழுது போக்கு இடமாகும். வெளியில் வெப்பநிலை எப்படி இருந்தாலும் இந்த இடத்திற்குள் வந்தால் குளிர்பிரதேசத்தில் இருப்பது போன்ற குளிர் வெப்பநிலையை அனுபவிக்கலாம்.


பார்வையாளர்கள் இங்கே உள்ள பனிச்சறுக்கில் விதவிதமான விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கப்படுகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கும் ஏற்றவாறு விதவிதமான பனிச்சறுக்கு விளையாட்டுகள் உள்ளன. அனைத்து வயதினரும் விளையாடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கோடை காலத்தில், பனிக்கட்டியில் ஒரு குளிர்ச்சியான ரைடு போக இது சரியான இடம் ஆகும்.

எஸ்கேப் அறைகள் (Escape rooms)

எஸ்கேப் அறைகள் என்பது குழுவாக விளையாடும் புதிர் விளையாட்டு ஆகும். இதில், குறிப்பிட்ட புதிர்களை தீர்க்க, காலக்கெடு வழங்கப்படுகின்றது. எனவே அதனை, உற்சாகமாக குழுவுடன் தீர்க்கும் பொழுது சவாலான அனுபவத்தை வழங்குகின்றது. இந்த எஸ்கேப் அறைகளை நகர முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் நாம் காணலாம். எனவே கோடைகாலத்தில் பொழுதைகழிப்பதற்கு சரியான இடம் இந்த எஸ்கேப் அறைகள் ஆகும்.

அருங்காட்சியகங்கள் (Museums)

அருங்காட்சியகம் என்பது பொதுவாகவே குழந்தைகளுக்கு அறிவினை வளர்ப்பதோடு அல்லாமல் நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்வதற்கு சரியான இடமாகும். துபாயில், அல் ஃபாஹிதி பகுதியில் உள்ள அருங்காட்சியகம் கோடை காலத்தில் பயனுள்ள வகையில் பொழுதினை கழிக்க விரும்புவோர்க்கு ஏற்ற இடம் ஆகும். இந்த அருங்காட்சியகம் துபாய் நாட்டின் பாரம்பரியம் மற்றும் சமகால கலை படைப்புகளை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உலகில் உள்ள மக்களுக்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.

அதேபோல் துபாயின் முக்கிய சாலையான ஷேக் சையது சாலையில் அமைந்துள்ள மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அனைத்து வயதினரும் சென்று பார்க்கக்கூடிய ஒரு அருங்காட்சியமாகும். நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும் இந்த கட்டிடமே தனிச்சிறப்பைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுமுறையில், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுதினை உபயோகமாக கழிக்க விரும்புகின்றவர்கள் மற்றும் சுற்றுலாவிற்காக துபாய் நாட்டிற்கு வருபவர்கள் மேற்கண்ட இடங்களை சுற்றி பார்க்க தவறாதீர்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!