ADVERTISEMENT

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்.. டெலிவரி ரைடர்கள் பைக்கிற்கு பதிலாக கார்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவு..!! கத்தார் அரசின் அதிரடி நடவடிக்கை..!!

Published: 14 Jul 2023, 10:37 AM |
Updated: 14 Jul 2023, 11:01 AM |
Posted By: admin

தற்பொழுது வளைகுடா நாடுகளில் கோடைகால வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திறந்தவெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மதிய ஓய்வு இடைவேளையை வளைகுடா நாடுகள் அனைத்தும் வழங்கி வருகின்றன. இதன்கீழ் டெலிவரி சேவையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் சில தளர்வுகளை கத்தார் அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கத்தார் தொழிலாளர் அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, டெலிவரி வேலை செய்யும் ரைடர்கள் கோடை காலங்களில் பைக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நிலவும் கோடை வெப்பத்தின் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை கார்களை மட்டுமே டெலிவரி ரைடர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவிகப்பட்டுள்ளது.

இது குறித்து இயற்றப்பட்ட அமைச்சக ஆணை எண் 14, கோடை காலத்தில் தொழிலாளர்கள் வெளிப்புற வேலையில் ஈடுபடுவதை தடுக்கின்றது. எனவே அதன்படி, ஜூன் ஒன்று முதல் செப்டம்பர் 15 வரை திறந்தவெளிகளில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லக்கூடாது என கத்தாரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஏற்கனவே, கட்டிட வேலை உட்பட வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த சலுகையானது அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு இந்த நடவடிக்கையினை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கேற்றவாறு உணவு விநியோக நிறுவனங்களும், டெலிவரி அட்டவணையை சரிசெய்தல், போதுமான ஓய்வு இடைவெளிகளை வழங்குதல், குளிர்ச்சியான உடைகள் மற்றும் ஹெல்மெட்கள் வழங்குதல் போன்ற உத்திகளை செயல்படுத்தியுள்ளன.

Nando’s என்பது கத்தாரில் உணவு டெலிவரி வழங்கும் ஒரு பிரபலமான நிறுவனம் ஆகும். எனவே, இதன் இயக்குனரான வியங்க்தேஷ் ஜெய்ஸ்வால் இதைப் பற்றி கூறும் பொழுது, டெலிவரி ரைடர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு முன்னுரிமை அளிக்கும் நாட்டின் திட்டத்தை நாங்கள் கடைபிடிக்க கடமைப்பட்டுள்ளோம். எனவே, கத்தார் அரசு கடந்த ஆண்டு முதல் கொண்டு வந்த டெலிவரிக்கு மதிய நேரங்களில் காரை மட்டுமே பயன்படுத்தும் திட்டத்தை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் சிறப்பாக செயல்படுத்த திட்டமிட்டு செய்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதனடிப்படையில் இந்நிறுவனமானது நாட்டிலுள்ள மொத்தம் பத்து கிளைகளிலும் மதிய உணவுகளை வழங்குவதற்காக சுமார் 35 கார்களை பயன்படுத்துகின்றது என்று தெரிவித்துள்ளது. மேலும் டெலிவரி ஊழியர்கள், வெப்பத்தின் தாக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காகவும், அவர்கள் போதிய நீர்ச்சத்துடன் இருப்பதற்காகவும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம் என்றும், மேலும் ஒரு டெலிவரியில் இருந்து அடுத்த டெலிவரிக்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிட இடைவெளியும் நாங்கள் கடைபிடிக்கிறோம் என்றும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து டெலிவரி ரைடர்கள் கூறும்பொழுது, “உச்சி வெயில் நேரங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது என்பது மிகவும் கடினம். எனவே, இந்த கட்டுப்பாடு எங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். மேலும் பெரும்பாலான உணவகங்களில் ரைடர்கள் அமர்ந்து ஆர்டர் தயாராகும் வரை காத்திருப்பதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார். கத்தார் நாடு அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த சலுகைகள் டெலிவரி டிரைவர்கள் இடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.