ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் வெப்பநிலை உயர்வால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ தாக்கும் அபாயம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்ட கத்தார் மருத்துவர்கள்!!

Published: 19 Jul 2023, 1:11 PM |
Updated: 19 Jul 2023, 1:46 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் கோடைகாலத்தின் போது  வெப்பம் அதிகமாக இருக்கும் என்று முன்பே கணிக்கப்பட்டுள்ளதால், வெயில் காலத்தில் வரக்கூடிய ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப பக்கவாதத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவத்துறை வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதேபோன்று கத்தார் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருவதால், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், அதன் அறிகுறிகள் என்ன என்பதை மக்கள் முன்கூட்டியே கணித்தால் பெரும் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் கத்தார் நாட்டைச் சேர்ந்த ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷன் (HMC) மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கத்தார் வானிலை மையத்தின் கணிப்பின்படி, அடுத்த 13 நாட்களில் நாட்டின் வெப்பநிலை கணிசமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் நேரமான பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான வெப்பமான நேரங்களில் பொதுமக்கள் தங்களின் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் HMC அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பொதுவாக வெப்பநிலை உயரும் பொழுது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் பாதிப்பானது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை எளிதில் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷனின் மருத்துவத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஒரு தீவிர வெப்பம் தொடர்பான நோயாகும். இது சூரிய ஒளி நேராக உடலில் படுவதனால் ஏற்படுகின்றது. இதனால் உடலின் வெப்பநிலையானது வேகமாக உயரும். மேலும், உடலானது தேவையான வியர்வையினை வெளியிட்டு குளிர்விக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாது.

ADVERTISEMENT

மேலும், “அதிக உடல் வெப்பநிலை, வியர்வை, கடுமையான தாகம், அதிகரித்த இதயத் துடிப்பு, தோல் சிவத்தல், தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், சுயநினைவு இழப்பு, கடுமையான சோர்வு ஆகியவை வெப்ப பக்கவாதத்தின் அறிகுறிகளாகும்” என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பத் தாக்குதலைத் தடுக்க, திரவம் மற்றும் தண்ணீரை நிறைய குடிக்கவும், நீரேற்றத்தை பராமரிக்கவும் மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தளர்வான, வசதியான மற்றும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் எனவும், நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் போன்றோர் சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் நீங்கள் சோர்வாக உணரும் பொழுது எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம் எனவும், குளிர்ந்த நீரால் உடனடியாக குளிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், ஒரு நபர் வெயிலின் தாக்கம் மூலம் அதிகமாக பாதிக்கப்பட்டால் உடனடியாக தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக குளிர்ந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், குளிர்ந்த நீரை குடிக்க கொடுக்க வேண்டும் எனவும், குளிர்ச்சியான சாதனங்களை பயன்படுத்தி உடலை குளிர்விக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். 30 நிமிடங்களுக்குப் பிறகும் அந்த நபரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அல்லது உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக இருந்தால் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டுமெனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கத்தார் வானிலை ஆய்வுத் துறை (QMD) கடந்த ஜூலை 16 ஆம் தேதி ‘அல் ஹனா’ நட்சத்திரத்தின் தொடக்கத்தைக் குறித்த தகவலை வெளியிட்டது. பொதுவாக இந்த காலகட்டத்தின் பொழுது நாட்டில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்பதால், கத்தார் நாட்டின் மருத்துவ வல்லுநர்கள் இந்த எச்சரிக்கையினை மக்களுக்கு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.