ADVERTISEMENT

அமீரகத்தில் அடுத்து வரவிருக்கும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை..! – குடியிருப்பாளர்களை குஷிப்படுத்தும் ஜூலை மாதம்..!!

Published: 6 Jul 2023, 8:52 AM |
Updated: 6 Jul 2023, 9:14 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டின் மிக நீண்ட வார இறுதி விடுமுறைகள் முடிந்துவிட்ட நிலையில், அமீரகத்தில் அடுத்த தொடர் விடுமுறை நாட்கள் எப்போது வரும் என்று, அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT

அமீரகத்தில் இஸ்லாமியர்களின் புனித தியாகத் திருநாளான ஈத் அல் அதாவை முன்னிட்டு ஆறு நாட்கள் அதிகாரப்பூர்வ வார இறுதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த நிலையில், ஜூலை 3 திங்கட்கிழமை முதல் அமீரகவாசிகள் வழக்கம் போல் தங்கள் அன்றாட வாழ்க்கையை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், அமீரக குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் ஒரு தொடர் விடுமுறை வரவுள்ளது. அதுவும் இதே ஜூலை மாதத்தில் இன்னும் சில நாட்களில் வரவிருப்பது கூடுதல் மகிழ்ச்சியாகும். அதாவது, இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி வருட பிறப்பிற்கு மற்றொரு மூன்று நாள் தொடர் விடுமுறையை அமீரக குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம்.

ADVERTISEMENT

இது குறித்து எமிரேட்ஸ் அஸ்ட்ரோனமி சொசைட்டியின் (Emirates Astronomy Society – ESA) தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் அவர்கள் கூறுகையில், முஹர்ரம் பண்டிகை என அழைக்கப்படும் புதிய ஹிஜ்ரி் ஆண்டானது (முஹர்ரம் 1) ஜூலை 19, புதன்கிழமையாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமீரக அரசால் வெளியிடப்பட்ட 2023ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறைகளின் பட்டியலின்படி, ஹிஜ்ரி புத்தாண்டைக் குறிக்கும் விடுமுறை வெள்ளிக்கிழமை, ஜூலை 21 அன்று இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்கள் வருவதால், குடியிருப்பாளர்கள் மூன்று நாட்கள் விடுமுறையை பெறுவார்கள்.

ADVERTISEMENT

இதற்கு அடுத்ததாக, இந்தாண்டின் நான்காவது நீண்ட விடுமுறை செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை நபிகள் நாயகத்தின் பிறந்தநாளன்று வரவுள்ளது. அதன்பிறகு இந்தாண்டின் இறுதி விடுமுறையானது அமீரக தேசிய தினத்தையொட்டி டிசம்பர் 2 மற்றும் 3 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய நாட்களில் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.