வளைகுடா செய்திகள்

ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் இரண்டாம் இடம்… முதலிடம் யார் தெரியுமா..??

ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டு வாழ் ஊழியர்களின் வளர்ச்சிகள் பற்றிய புள்ளி விவரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் தகவல்களுக்கான தேசிய மையம் (NCSI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஓமானில் பணி புரியும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையான வளர்ச்சிப் பாதையை அனுபவித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

தொழிலாளர்கள் சந்தையில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்குகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்குகள் பற்றிய புள்ளி விவரங்கள் துறைவாரியாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் 2023 ஆம் ஆண்டின் மே மாதம் வரை மொத்தம் 1,784,736 வெளிநாட்டு ஊழியர்கள் ஓமானில் வேலை செய்கின்றனர் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.8% அதிகமாகும்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை அறிக்கை வெளிப்படுத்துகிறது. அதன்படி, துறை வாரியான விநியோகத்தைப் பொறுத்தவரை, 1,406,925 நபர்களைக் கொண்ட கணிசமான வெளிநாட்டு பணியாளர்களுடன், தனியார் துறையானது முன்னணி இடம் வகிக்கின்றது. அரசு நிறுவனங்களை பொறுத்தவரை மொத்தம் 44,236 வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நாடுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில், அதிகபட்சமாக வங்காள நாட்டைச் சேர்ந்த 703,840 பேர் ஓமானில் வேலை செய்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக,530,242 நபர்களுடன் இந்தியத் தொழிலாளர்கள் இரண்டாம் இடம் வகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த 275,719 தொழிலாளர்கள் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் முக்கிய கவர்னரேட்டுகளின் பட்டியலையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அதில் தலைநகரான மஸ்கட், 669,527 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இடமளிக்கும் முன்னணி கவர்னரேட்டாக தனித்து நிற்கிறது. அதற்கு அடுத்தபடியாக தோஃபார் மற்றும் முஸந்தம் ஆகிய கவர்னரேட்டுகள் முறையே 220,705 மற்றும் 14,727 நபர்களை பணியமர்த்தி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!