வளைகுடா செய்திகள்

6 மாதங்களில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்… குவைத் அரசின் அதிரடி முடிவு!!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் நாடு கடத்தப்பட்டவர்களின் விவரங்களை குவைத் நாடு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இந்த ஆண்டின் முதல் பாதியில் 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும், நாடுகடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைக்காட்டிலும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நாடு கடத்தப்படும் மையத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் அல்லது குற்றச்சாட்டு வழக்குகள், நிர்வாக தொடர்பான நாடுகடத்தல் அல்லது குவைத்தில் இருந்து நாடுகடத்தப்பட வேண்டிய நீதித்துறை தீர்ப்புகள் போன்றவற்றின் காரணமாக இத்தனை பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது தெரிவித்துள்ளது.

நாடு கடத்தப்பட்டவர்கள் ஈடுபட்ட குற்றங்களில் போதைப்பொருள் கடத்தல், சண்டைகள், திருட்டுகள், மதுபானம் காய்ச்சுதல், குடியுரிமை காலாவதி மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு இணங்காதது ஆகியவை அடங்கும். மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில்,நாடு கடத்தப்பட்டவர்களில் இந்தியர்கள், ஃபிலிப்பினோக்கள், இலங்கையர்கள், எகிப்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் (வரிசைப்படி) போன்றவர்களே அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கண்ட நாட்டைச் சேர்ந்தவர்களே குவைத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுவதால், குற்றம் செய்தவர்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் 250,000 பேர் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில், அரசுத் துறையில் பணியாற்றியவர்கள் 7,000 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அரசுத் துறையில் பணி புரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 91,000பேர் ஆகும். இதில் பெரும்பாலானோர் மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளில் பணிபுரிகின்றனர். மேலும், நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரியும் 3,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நகராட்சி, பொதுப்பணித்துறை அமைச்சகம், வீட்டுவசதி ஆணையம், மின்சாரம் மற்றும் குடிநீர் அமைச்சகம் போன்ற அரசு அலுவலகங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பெயர்கள், விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!