ADVERTISEMENT

ஓமான்: இயற்கை வளங்களை பாதுகாக்க ஒரு மில்லியன் மர விதைகளை நடும் பிரச்சாரம் தொடக்கம்!!

Published: 22 Jul 2023, 5:18 PM |
Updated: 22 Jul 2023, 5:18 PM |
Posted By: admin

ஓமான் நாட்டில் உள்ள தோஃபர் கவர்னரேட்டின் மலைகளில் ஒரு மில்லியன் விதைகளை நடும் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல் ஆணையம் (EA) மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரமானது ஜூலை 26ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமான் நாட்டில் பத்து மில்லியன் மரங்களை நட வேண்டும் என்ற இலக்கின் ஒரு பகுதியாக, உள்ளூர் காட்டு தாவரங்களை பரப்புவதற்கான முயற்சியில் சுற்றுச்சூழல் ஆணையம் இந்த பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தோஃபர் கவர்னரேட்டில் உள்ள சுற்றுச்சூழல் பொது இயக்குநரகத்தின் தலைவர் பின் முகமது அல் ஷெஹ்ரி இது பற்றி கூறுகையில், கிழக்கில் உள்ள மிர்ஃபத் விலாயத் முதல் தால்குட் விலாயாத் வரை கரீஃப் பருவத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதே சமயம் மேற்கு பகுதிகளில் விவசாய பகுதிகள், மீன்பிடி பகுதிகள், மேய்ச்சல் பகுதிகள் மற்றும் நீர் நிறைந்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, தாவர வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில் இந்த பிரச்சாரமானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் கூறியுள்ளார்.

தற்பொழுது மரங்களை நடுவதற்கு தேவையான காட்டு தாவர விதைகளை சேகரித்தல், தயாரித்தல், அவற்றினை வகைப்படுத்துதல் மற்றும் அவற்றினை முறையாக பாதுகாத்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர் விளக்கினார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையால் பாதிக்கப்பட்ட இடங்களான தும்ரைத் மற்றும் சலாலாவில் சுமார் 108,000 விதைகள் நடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இந்த பிரச்சாரமானது குறிப்பாக தோஃபர் பகுதிகளில் பிரபலமான மற்றும் பாரம்பரியமான காட்டு மரங்களின் விதைகளை நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் சித்ர், காட்டு அத்தி (அல்-காயித்), அலோ வேரா மற்றும் அல்-குஃபுட் ஆகியவை அடங்கும். இதன் மூலம் நாட்டின் பாரம்பரியமான இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த பிரச்சாரமானது செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.