ADVERTISEMENT

2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்ற கத்தார்… கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனை!!

Published: 16 Jul 2023, 12:06 PM |
Updated: 16 Jul 2023, 12:33 PM |
Posted By: admin

கத்தார் நாட்டின் சுற்றுலா துறையானது, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கத்தார் நாடானது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட கத்தார் சுற்றுலா அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை, பயணிகளின் எண்ணிக்கையானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது இரட்டிப்பாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், கத்தாருக்கு வருகை தந்தவர்களில் 51 சதவீதத்தினர் விமானம் மூலமாகவும், 37 சதவீதத்தினர் தரை வழியாகவும் மற்றும் 12 சதவீதத்தினர் கடல் வழியாகவும் வந்துள்ளனர் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும், வருகை தந்த மொத்த பயணிகளில் கால் சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்தவர்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதற்கு அடுத்தபடியாக இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து பயணிகள் அதிக அளவு வந்துள்ளனர்.

ADVERTISEMENT

கத்தார் டூரிஸம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாதளவு இந்தாண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் அதிகபட்ச எண்ணிக்கை (567k) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. கத்தார் நாடானது, சுற்றுலா துறையினை மேம்படுத்த ‘Feel More in Qatar’ எனப்படும் பிரச்சாரத்தை தொடங்கியது நாட்டிற்கு நல்ல ப்ரொமோஷனாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது, கத்தாரின் சிறந்த சுற்றுலா பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றியது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி முதல் கத்தாரின் சுற்றுலாத்துறையானது ஃபீல் வின்டர், தோஹா ஜூவல்லரி மற்றும் வாட்ச்ஸ் கண்காட்சியின் 19வது பதிப்பு, கத்தார் சர்வதேச உணவுத் திருவிழாவின் 12வது பதிப்பு மற்றும் கத்தார் லைவ் வழங்கும் ஏராளமான இசை நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளான கத்தார் ஜிகேஏ ஃப்ரீஸ்டைல் ​​கைட் உலகக் கோப்பை 2023, உலக ஜூடோ சாம்பியன்ஷிப் மற்றும் 8வது கத்தார் டென்னிஸ் ஃபெடரேஷன் ஓபன் போன்ற சர்வதேச நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதன் மூலம், உலகில் உள்ள பார்வையாளர்களை தனது பக்கம் வெற்றிகரமாக ஈர்த்துள்ளது.

அது மட்டுமல்லாமல் கத்தார் சுற்றுலா துறையால் அறிவிக்கப்பட்ட ‘ஈத் இன் கத்தார்’ என்ற பிரச்சாரமானது ஏகப்பட்ட பார்வையாளர்களை கத்தாரின் பக்கம் ஈர்த்தது. இதன் காரணமாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஈத் கொண்டாட்டங்களுக்கான, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அடங்கிய தனியான அட்டவணையை வெளியிட்டு பார்வையாளர்களை கவர்ந்தது.

மேலும் பல முக்கிய நிகழ்வுகளான கத்தார் சுற்றுலாவின் ‘ஃபீல் சம்மர் இன் கத்தார்’, ஜெனீவா சர்வதேச மோட்டார் ஷோ, ஃபார்முலா 1 மற்றும் எக்ஸ்போ தோஹா 2023 ஆகியவை வரும் மாதங்களில் வரவிருப்பதால், இந்த ஆண்டின் மீதமுள்ள மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.