அமீரக செய்திகள்

அமீரகத்தில் உச்சம் தொடும் வெயிலின் தாக்கம்.. முதல் முறையாக 50ºC ஐ கடந்த வெப்பநிலை.. NCM அறிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு கோடைகாலம் சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும், தற்போது வெயிலின் உச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமீரகத்தில் இதுநாள் வரையிலும் வெப்பநிலை 49ºC க்கு கீழே பதிவாகி வந்த நிலையில், தற்போது வெப்பநிலை 50ºC ஐ தாண்டியதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் 50ºC வெப்பநிலையை கடப்பது இதுவே முதல் முறை என்றும் NCM கூறியுள்ளது.

NCM அறிவிப்பின்படி, இன்று ஞாயிறு (ஜூலை 16) மதியம் 2.45 மணியளவில் அல் தஃப்ரா பகுதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 50.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, ஓரளவு மேகமூட்டமான வானிலை மற்றும் மிதமான காற்றுடன் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதே வேளையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அபுதாபி மற்றும் துபாயில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலையானது முறையே 34 டிகிரி செல்சியஸ் மற்றும் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமீரகத்தில் உள்ள மருத்துவர்கள், அதிக வெப்ப நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கூடுதலாக, சன்ஸ்கிரீன் மற்றும் சன்கிளாஸ்களை அணிவதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய தட்பவெப்ப நிலையில் லேசானதாக உணர தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிவது சிறந்தது என்றும் கூறியுள்ளனர்.

அமீரகத்தை பொறுத்தவரை, ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரையிலான மூன்று மாதங்களுக்கு ‘மதிய நேர வேலை இடைவேளை (Mid-Day Break)’ நடைமுறையில் உள்ளது, இது திறந்த வெளிகளில் அல்லது நேரடி சூரிய ஒளியில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை செய்வதைத் தடை செய்கிறது.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தால் (MoHRE) தொடர்ச்சியாக 19 வது ஆண்டாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த முயற்சியானது உச்ச கோடை வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கிறது. மேலும் இதற்கு இணங்காத முதலாளிகளுக்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் 5,000 திர்ஹம் அபராதம் வீதம் அதிகபட்சமாக 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!