ADVERTISEMENT

அமீரகத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை எப்போது முதல் குறையும்.. பயண முகவர்கள் கூறிய தகவல்கள்..!!

Published: 8 Jul 2023, 10:55 AM |
Updated: 8 Jul 2023, 11:13 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதாவிற்கு விடப்பட்ட நீண்ட தொடர் விடுமுறை மற்றும் அமீரகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை போன்றவற்றால், நாட்டில் விமான டிக்கெட்டுகளின் விலையானது வழக்கத்தை விடவும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த விலை உயர்வானது அமீரகத்தில் எப்போது முதல் குறையத் தொடங்கும் என, சொந்த நாடுகளுக்கு விடுமுறை செல்ல திட்டமிட்டுள்ள அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமீரகத்தில் உள்ள பயண முகவர்கள் இது குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் வாரங்களில் இருந்து விமான பயணத்திற்கான டிக்கெட்டுகளின் விலை மலிவாகும் என்று அமீரகத்தில் உள்ள டிராவல் ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை நெருங்கி வருவதால், சில விமான நிறுவனங்களில் அதிக விலையை எதிர்பார்க்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து டிராவல் நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கையில், வழக்கமாக இந்த மாதத்தில் வழங்கப்படும் முன்னறிவிப்பு மற்றும் கடந்தகால தரவுகளின் அடிப்படையில், ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து விமான டிக்கெட்டுகளின் விலை கணிசமாக குறையத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, கோடை விடுமுறை காரணமாக இந்தாண்டு ஜூன் 20 முதல் ஜூலை 15 வரை உச்சத்தில் இருந்த விமான டிக்கெட்டுகளின் விலை, சீசனல் நெரிசல் குறைந்த பிறகு பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 10 வரை உயர தொடங்கும் என தெரிகிறது.

ADVERTISEMENT

ஏனெனில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து அமீரகத்தில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. ஆகையால், பிற நாடுகளில் இருந்து அமீரகத்திற்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கையும் மற்றும் வெளிநாடுகளுக்குத் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

கடந்த மாதத்தில் ஈத் அல் அதா விடுமுறையின் நெருக்கத்தில் பல குடியிருப்பாளர்கள் கடைசி நிமிட பயணத் திட்டங்களை மேற்கொண்டனர். அதன் விளைவாக விமானக் கட்டணங்களின்  விலைகளில் கடும் உயர்வை அனுபவித்தனர். எனவே, ஜூலை மூன்றாவது வாரத்தில் வருகின்ற ஹிஜ்ரி புத்தாண்டிற்கு முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுவது சிறந்தது.

பொதுவாக, விமான டிக்கெட்டுகளின் விலைகள், அதிகரிக்கும் தேவை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பொருத்து மாறுபடும். கடந்த வாரம் ஈத் விடுமுறை காரணமாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், உச்சத்தை நோக்கி நகர்ந்த விமான டிக்கெட்டின் விலை, அடுத்த வாரம் சீராக இருக்கும் என பயண முகவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.