வளைகுடா செய்திகள்

ஜூலை மாதத்தில் மட்டும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்றுள்ள குவைத் சர்வதேச விமான நிலையம்…

குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 1,447,790 பயணிகள் வருகை புரிந்துள்ளனர் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, DGCA-வின் செயல் இயக்குநர் ஜெனரல் எமத் அல்-ஜலாவி கூறிய அறிக்கையில் இந்த ஆண்டு விமான நிலையத்திற்கு வருகை புரிந்த பயணிகளின் எண்ணிக்கை 16 சதவீதமும், விமானங்களின் எண்ணிக்கை 23 சதவீதமும் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், 2023 ஆம் ஆண்டின் ஜூன் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் விமானப் போக்குவரத்து மூன்று சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சென்ற ஆண்டு இதே நேரத்தில் வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 640,458 ஆக இருந்தது என்றும், ஜூலை மாதத்தில் நாட்டை விட்டு வெளியேறிய பயணிகளின் எண்ணிக்கை 806,232 ஆக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் இந்த ஆண்டு போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை 166,465 ஐ எட்டியது, இது 2022 ஆம் ஆண்டின் அதே நேரத்துடன் ஒப்பிடும்போது 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், ஜூலை மாதத்தில் குவைத் விமான நிலையத்தில் 12,468 பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன என்றும் கூறியுள்ளார். அத்துடன் விமான நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் எடையும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக கூறினார். மேலும் விமான பயணிகளின் பயணத்தை கணக்கில் கொள்ளும் பொழுது அவர்கள் துபாய், கெய்ரோ, இஸ்தான்புல், தோஹா மற்றும் ஜித்தா ஆகிய இடங்களுக்கு அதிகம் பயணம் செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Related Articles

Back to top button
error: Content is protected !!