அமீரக செய்திகள்

ஓமான்: ஒரு முதலாளி தொழிலாளியை எப்பொழுது வேலையில் இருந்து நீக்கலாம்..?? தொழிலாளர் சட்டம் சொல்வது என்ன..??

ஓமானில் திருத்தப்பட்ட புதிய தொழிலாளர் சட்டம் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. தொழிலாளர்களுக்கு பல்வேறு நன்மைகள் பயக்கும் இந்த திட்டத்தினால் ஓமானில் பணிபுரியும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஓமான் நாட்டின் தொழிலாளர் சட்டம் 53/2023, ஒரு தொழிலாளரை எந்த நிலையில் பணியில் இருந்து நீக்கலாம் என்பது குறித்த விவரமான வரைமுறையை கொண்டுள்ளது. அதன்படி மோசமான செயல்திறன், வேலையில் இருந்து நீண்ட காலம் இல்லாதது மற்றும் தவறான நடத்தை போன்றவற்றின் பின்னணியில் ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கான நிபந்தனைகளை அமைத்துள்ளது.

ஆள்மாறாட்டம்

அத்தியாயம் 3 இல், கட்டுரை (40) கூறியுள்ள சட்டத்தின் படி, ஒரு நபர் மற்றொரு நபரைப் போல வேலை பெறுவதற்காக ஆள்மாறாட்டம் செய்தால், முன் அறிவிப்பின்றி அந்த தொழிலாளரை சலுகை தொகையையும் கொடுக்காமலே பணிநீக்கம் செய்யலாம்.

மேலும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை அவர் கடைபிடிக்கவில்லை என்றால், அல்லது தொழிலாளி செய்த தவறினால் முதலாளிக்கு பெரும் பொருள் இழப்பு நேர்ந்தால், அது நிகழ்ந்தது குறித்து தனக்குத் தெரிந்த நாளிலிருந்து 30 வேலை நாட்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். அதன் பின்பு பணி நீக்கம் செய்யலாம்.

தவறான நடத்தை

ஒரு ஊழியர், அவர் பணிபுரியும் நிறுவனம் தொடர்பான ரகசியங்களை சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டதைத் தவிர வேறு வழியில் வெளிப்படுத்தினால், அவர் குற்றம் செய்ததாக கருதப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவார். பணியிடத்தில் அல்லது வேலையின் போது, ​​அவர் குடிபோதையில் காணப்பட்டால், பொது ஒழுக்கத்திற்கு எதிரான செயலை செய்ததாக கருத்தில் கொண்டு பணிநீக்கம் செய்யப்படுவார்.

மேலும், வேலையின் போது அல்லது வேலையின் காரணமாக, அவர் முதலாளி அல்லது அவரது பிரதிநிதியைத் தாக்கினால், அல்லது அவர் தனது மேலதிகாரிகளில் ஒருவரைத் தாக்கினால், அல்லது வேலை செய்யும் இடத்தில் ஒரு தொழிலாளியைத் தாக்கினால், பணி நீக்கம் செய்யப்படுவார்.

வேலை ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வேலையைச் செய்வதற்கான தனது கடமையை தொழிலாளி தீவிரமாக மீறினால், பணிநீக்கத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.

அறிவிப்பு காலம் (notice period) இல்லாமல் எப்பொழுது தொழிலாளர்கள் வெளியேறலாம்?

இந்தச் சட்டத்தின் பிரிவு (38) இல் குறிப்பிட்டுள்ள படி அறிவிப்புக் காலத்தைக் கடைப்பிடிக்காமல், தொழிலாளி வேலையை விட்டு விட உரிமையுண்டு. ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின் வேலையை விடும் பட்சத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளான சேவையின் இறுதிக் கொடுப்பனவு (gratuity), மற்றும் இழப்பீடு ஆகியவை கிடைக்கும் என்று பிரிவு (41) கூறுகிறது.

ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு எந்த நேரத்திலும் இரு தரப்பினரும் ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று பிரிவு (38) கூறுகிறது. அறிவிப்பு காலத்தை கடைபிடிக்காமல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால், ஒப்பந்தத்தை நிறுத்தும் தரப்பினர் மற்ற தரப்பினருக்கு அறிவிப்பு காலம் அல்லது அதன்  பகுதிக்கு சமமான இழப்பீட்டை செலுத்த வேண்டும், இது தொழிலாளி பெறும் கடைசி முழுமையான ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

கட்டுரை (42) இன் படி கீழ்கண்ட காரணங்களால் ஒப்பந்தம் முடிவுக்கு வரலாம்.

  • அதன் காலாவதி அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட வேலையை முடித்தல்,
  • சட்டத்தின் விதிகளின்படி தொழிலாளி அல்லது முதலாளியால் ஒப்பந்தம் முடிக்கப்படுதல்,
  • தொழிலாளியின் இயலாமை,
  • திடீரென மரணம் அடைந்தால்,
  • தொழிலாளி நோயால் பாதிக்கப்பட்டால்,
  • ஒரு வருடத்திற்குள் மூன்று மாதங்களுக்குக் குறையாத தொடர்ச்சியான அல்லது தனித்தனியாக வேலை செய்யாமல் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒப்பந்தம் நிறுத்தப்படலாம்.

முதுமை மற்றும் ஓமனைசேஷன்

கட்டுரை (43) இன் படி, பின்வரும் சந்தர்ப்பங்களில் தொழிலாளிக்கு அறிவித்த பிறகு முதலாளி தனது பங்கில் ஒப்பந்தத்தை நிறுத்தலாம். அதன்படி தொழிலாளி முதுமையை அடைந்தால் அல்லது வெளிநாட்டு தொழிலாளி பணிபுரியும் அதே இடத்தில் ஓமான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஏற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அல்லது தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட திறனை நிரூபிக்கும் காலத்திற்குள் தொழிலாளி தனது திறனை நிரூபிக்காவிட்டால் முதலாளி ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு உரிமை உண்டு.

Related Articles

Back to top button
error: Content is protected !!