அமீரக செய்திகள்

5 திர்ஹம் முதல் துபாய் ஃபெர்ரி பயணம்: முக்கிய இடங்களை உங்கள் குடும்பத்துடன் ஜாலியா பார்வையிடலாம்..!! முழுவிபரங்கள் உள்ளே..!!

துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அதே நேரம் பட்ஜெட்டும் நம் கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தால் துபாயின் ஃபெர்ரி பயணம் அதற்கு சிறந்த தேர்வாகும். இதற்கான டிக்கெட் விலையானது 5 திர்ஹம் முதல் கிடைப்பதால் எளிதில் துபாயில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கலாம்.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) இயக்கப்படும் இந்த ஃபெர்ரி சேவையானது துபாயின் ஆறு இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஃபெர்ரியில் இருந்து, துபாய் க்ரீக், புர்ஜ் அல் அரப் மற்றும் அட்லாண்டிஸ், தி பாம் உள்ளிட்ட நகரத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களின் காட்சிகளை நீங்கள் காண முடியும்.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ஃபெர்ரியானது 98 பேர் வரை அமரும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது, எந்தெந்த நேரங்களில் சவாரிகள் செய்யலாம் என்பதை பற்றிய தெளிவான விவரத்தினை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

ஃபெர்ரி பயணத்திற்கான டிக்கெட்டுகளை எங்கு வாங்கலாம்?

துபாயில் இருக்கக்கூடிய மரைன் ஸ்டேஷனில் இதற்கான டிக்கெட்டுகளை நேரடியாக சென்று டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது rta.ae என்ற RTA இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். நிலையத்திற்கு நேரடியாக சென்று டிக்கெட்டை வாங்கும்பொழுது நோல் கார்டு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏற்காது, எனவே நீங்கள் பணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

துபாய் ஃபெர்ரி டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்குவது எப்படி?

ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் திட்டமிட்டால், பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக அதை வாங்க வேண்டும்.
1. அதன்படி RTA இணையதளத்திற்கு சென்று மெனு பட்டியில் ‘Marine’ என்பதைக் கிளிக் செய்யவும்.
2. அடுத்து, ‘புக் மரைன் டிக்கெட் (Book Marine Ticket’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் பயண விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பயணிக்கக்கூடிய இடம், போக்குவரத்து முறை மற்றும் எந்த வழியில் பயணம் செய்யலாம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக: க்ரீக்; ஃபெர்ரி; அல் குபைபா முதல் துபாய் மெரினா வரை.
4. பின் ‘Search’ என்பதைக் கிளிக் செய்யவும்.
5. கிடைக்கக்கூடிய அட்டவணையில் இருந்து உங்கள் தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து, நீங்கள் கோல்டு அல்லது சில்வர் கேபினில் அமர விரும்புகிறீர்களா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கோல்டு கிளாஸ் கேபினில் அதிக இட வசதியும், சொகுசு இருக்கை வசதியும் இருப்பதால் டிக்கெட் விலை அதிகமாகும்.
7. பயணிகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும். டிக்கெட்டின் விலை ஆனது உங்களுக்கு காண்பிக்கப்படும்.
8. பின் ‘Add to basket’ என்பதைக் கிளிக் செய்யவும்.
9. உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும் – முழு பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்.
10. அடுத்து, டிக்கெட்டுகளை உறுதிசெய்து, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்

துபாய் ஃபெர்ரியின் வழிகள், நேரம் மற்றும் டிக்கெட்டின் விலை:

துபாய் ஃபெர்ரி ஆறு வழிகளில் பயணம் மேற்கொள்ளும். ஒவ்வொரு பயணத்திற்கான செலவும் நீங்கள் எந்த பாதையில் சென்றீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

CR10 பாதை – அல் குபைபா – சூக் அல் மர்ஃபா

பர் துபாயின் அல் ஷிந்தகாவில் உள்ள அல் குபைபா நிலையத்திலிருந்து துபாய் ஐலேண்டில் உள்ள சூக் அல் மர்ஃபா, தேராவிற்கு இந்த பாதை உங்களை அழைத்துச் செல்கிறது. அல் குபைபா நிலையம் பர் துபாயில் உள்ள கலாச்சார அடையாளங்களான ஷிந்தகா அருங்காட்சியகம், சூக் அல் மர்ஃபாவில் உள்ள பிரபலமான சந்தை ஆகியவற்றை பார்வையிடலாம்.

நேரம்: வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 6.15 முதல் இரவு 9.45 வரை.
செலவு: ஒரு வழி பயணத்திற்கு 5 திர்ஹம்ஸ்.

FR1 பாதை – துபாய் வாட்டர் கனல் – அல் குபைபா அல்லது துபாய் மெரினா

இந்த வழித்தடத்தில், பயணிகள் துபாய் வாட்டர் கனல் பகுதியின் கடல் போக்குவரத்து நிலையத்திலிருந்து பர் துபாயில் உள்ள அல் குபைபா அல்லது துபாய் மெரினாவுக்கு ஃபெர்ரியில் செல்ல விருப்பம் உள்ளது.

நேரம்: தினமும் மதியம் 2.15 மற்றும் இரவு 7.15 மணிக்கு

செலவு:
• சில்வர் கேபின் – 25 திர்ஹம்ஸ்
• கோல்டு கேபின் – 35 திர்ஹம்ஸ்

FR1 துபாய் வாட்டர் கேனல்- துபாய் மெரினா மால்

துபாயின் முழு கடற்கரையையும் இந்த பாதையில் நீங்கள் கண்டுகளிக்கலாம். பர் துபாயில் உள்ள அல் ஷிந்தகாவில் இருந்து ஜூமைரா பீச் ரெசிடென்ஸிகளுக்கு (JBR) அருகிலுள்ள புளூவாட்டர்ஸ் ஐலேண்ட் வரை உங்களை இந்த பாதை அழைத்துச் செல்லும். இந்தப் பயணத்தின் போது, ​​துபாய் க்ரீக், ஜுமேரா கடற்கரை, துபாய் நீர் கால்வாய் பாலம், புர்ஜ் அல் அராப், பாம் ஜுமேரா மற்றும் ப்ளூவாட்டர்ஸ் தீவு ஆகியவற்றைக் காண முடியும்.

நேரம்: தினமும் மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கு.

செலவு:
• சில்வர் கேபின்: ஒரு வழி பயணத்திற்கு 50 திர்ஹம்.
• கோல்டு கேபின்: ஒரு வழி பயணத்திற்கு 70 திர்ஹம்.
• ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்.

FR3 பாதை – துபாய் க்ரீக்கைச் சுற்றி அல் குபைபா சுற்றுப்பயணங்கள்

இந்த குறிப்பிட்ட வழித்தடமானது பயணிகள் துபாய் கிரீக்கின் வரலாற்றை பற்றி அறிய உதவுகின்றது. இந்த பயணத்தின் போது நீங்கள் அல் ஃபாஹிதி ஹிஸ்டோரிகல் டிஸ்ட்ரிக்ட், அல் சீஃப் ஹெரிடேஜ் டிஸ்ட்ரிக்ட் மற்றும் கிரீக்கில் அமைந்துள்ள சூக்குகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். தற்பொழுது இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FR4 பாதை – துபாய் மெரினா மால் – பாம் ஜுமேரா – அட்லாண்டிஸ் தி பாம்

இந்த பாதை துபாய் மெரினா மால் கடல் நிலையத்திலிருந்து புறப்பட்டு உங்களை பாம் ஜுமேரா மற்றும் அட்லாண்டிஸ் தி பாம் ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்கிறது.

நேரம்:

தினமும் காலை 11.30 மற்றும் மாலை 4.30 மணிக்கு

செலவு:
• சில்வர் கேபின்: ஒரு வழி பயணத்திற்கு 50 திர்ஹம்.
பேமிலி பேக்கேஜ் (இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள்): 140 திர்ஹம்ஸ்

• கோல்டு கேபின்: ஒரு வழி பயணத்திற்கு 70 திர்ஹம்ஸ்.
பேமிலி பேக்கேஜ் (இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள்): 240 திர்ஹம்ஸ்

இரண்டு வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடியும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகவும் பயணம் செய்யலாம்.

துபாய் – ஷார்ஜா

ஷார்ஜாவில் உள்ள அக்வாரியம் மரைன் ஸ்டேஷன் – துபாயில் உள்ள அல் குபைபா மரைன் ஸ்டேஷன்

இந்த வழித்தடமானது வாரத்தின் ஒவ்வொரு நாளைப் பொறுத்து ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலைய்த்திற்கு வெவ்வேறு நேரங்களில் பல பயணங்களை இயக்குகிறது  மேலும் துபாய்க்கு வந்தவுடன் அல் குபைபா நிலையத்தில் இருந்து துபாய் மெட்ரோவை பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

நேரம்

ஷார்ஜா – துபாய்

  • வெள்ளி, சனி, ஞாயிறு : மதியம் 2 மணி, மாலை 4 மணி & மாலை 6 மணி
  • திங்கள் முதல் வியாழன் வரை : காலை 7, 8.30, மாலை 4.45, மாலை 6.15

துபாய் – ஷார்ஜா 

  • வெள்ளி, சனி, ஞாயிறு மதியம் 3 மணி, மாலை 5 மணி & இரவு 8 மணி
  • திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.45, மாலை 4, மாலை 5.30, இரவு 7

செலவு

  • சில்வர் கேபின் ஒரு வழிக்கு 15 திர்ஹம்  
  • கோல்டு கேபின் 25 திர்ஹம்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் இலவசம்

 

Related Articles

Back to top button
error: Content is protected !!