அமீரக செய்திகள்

ஃபேமிலி விசா மீண்டும் வழங்க ஒப்புதல் அளித்த குவைத் அரசு… படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் திறக்கப்படும் என தகவல்..!!

குவைத் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, ஃபேமிலி விசா வழங்கும் நடைமுறையினை குவைத் அரசு சில மாதங்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், சுகாதாரத் துறையில் பணிபுரியும், அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஃபேமிலி விசா வழங்கும் நடைமுறையினை மீண்டும் தொடங்க இருப்பதாக தற்போது செய்திகள் கிடைத்துள்ளன.

முதல் கட்டமாக, சுகாதாரத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான குடும்ப விசா அளிப்பதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

குவைத்தில் உள்ள மருத்துவ ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சரான டாக்டர் அஹ்மத் அல்-அவாடியின் கோரிக்கைக்கு, முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல்-கலீத் ஒப்புதல் அளித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் நாளிதழில் தெரிவித்துள்ளன.

ஃபேமிலி விசா வழங்கப்படும் பொழுது, ஆண் குழந்தைகள் 15 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் மற்றும் பெண் குழந்தைகள் 18 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரத்துறையினை மேம்படுத்தும் நோக்கில், திறமையான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுப்பதற்கு அவர்களுக்கு குடும்ப விசா அளிப்பதன் மூலம் குவைத் நாட்டிலேயே தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இந்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

எனினும், ஃபேமிலி விசா வழங்கப்படுவதற்கான தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டில் உள்ள குடிமக்களின் விகிதம் மற்றும் வெளிநாட்டிரனின் விகிதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, மக்கள்தொகையினை சமன் செய்யும் நோக்கில் படிப்படியாக எல்லா வகையான விசாக்களும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்ப விசா மீண்டும் வழங்குவதற்காக சலுகை குறித்து உள்துறை அமைச்சகத்தின் சட்டத்துறையால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசாவைப் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு 500 தினார் முதல் 800 தினார் வரை உயர்த்தப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் விசாவினை பெறுபவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து அசல் பணி அனுமதி பத்திரத்தை பெற்று அதனை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளில் ஈடுபட்டு கூடுதல் சம்பளம் பெற்றால் அது ஏற்றுக் கொள்ளப்படாது எனவும், பிரதான பணியில் பெறப்படும் சம்பளம் மட்டுமே கணக்கிடப்பட்டு விசா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆராய்ந்து பார்க்கையில், குவைத் நாட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஊழியர்கள் குடும்ப விசா பெறுவதற்கு வாய்ப்புள்ளது. எனினும் அரசாங்கத்திடமிருந்து முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. முறையான அறிவிப்பு வரும் பட்சத்தில், தங்கள் குடும்பத்தினை குவைத் நாட்டிற்கு கொண்டு வந்து, அவர்களுக்கு அருகில் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!