அமீரக செய்திகள்

உச்சம் தொடும் இந்தியா – UAE விமான டிக்கெட் விலை.. அமீரகம் திரும்ப முடியாமல் பயணத்தை தள்ளி வைக்கும் குடியிருப்பாளர்கள்..!!

வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரும் விமான டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாக அதிகரித்து வருவதால், கோடை விடுமுறை முடிந்து அமீரகத்திற்கு திரும்ப வேண்டிய குடியிருப்பாளர்கள் பலர் தங்களது பயணத்தை தள்ளிப் போடுவது தெரியவந்துள்ளது. மேலும் இது அவர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அதிலும், பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமீரக குடியிருப்பாளர்கள், விமான டிக்கெட் விலை எதிர்பாராதவிதமாக உயர்ந்ததால் தற்போது அமீரகத்திற்கு திரும்ப முடியாமல் அவதிப்படுவதாக கூறியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் வருடாந்திர விடுப்பில் அமீரகத்திலிருந்து சொந்த ஊருக்குப் சென்ற அமீரக குடியிருப்பாளர் ஒருவர், தனிப்பட்ட சில காரணங்களுக்காக அமீரகம் திரும்பும் நாளை தாமதப்படுத்தியுள்ளார். பின்னர், அவர் ரிட்டர்ன் டிக்கெட்டை மாற்றும் போது டிராவல் ஏஜென்ட் அதனை ரத்து செய்துவிட்டு புதிய டிக்கெட்டை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறு டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது துபாயிலிருந்து 1,100 திர்ஹம்ஸ் கட்டணத்தில் நாட்டிற்கு சென்று வருவதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டில் அவர் தனது சொந்த நாட்டிற்கு பயணித்துள்ளார். ஆனால் தற்போது துபாய் திரும்புவதற்கான ஒரு வழி டிக்கெட்டின் விலை மட்டுமே 1,700 திர்ஹம்களாக உயர்ந்திருந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதே போன்று, ஷார்ஜாவில் ஆசிரியையாகப் பணிபுரியும் ஷஃபா ஷாஹித் என்பவரும், சொந்த ஊரில் விடுமுறையை முடித்து தனது குடும்பத்தினருடன் ஆகஸ்ட் நடுப்பகுதியில் அமீரகம் திரும்ப திட்டமிட்டதாகவும், ஆனால் திடீரென டிக்கெட்டின் விலை ஓரிரு நாட்களில் கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்ததால் அவர்களது திட்டங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விமானக் கட்டணம் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் நிலையில், பயணத் துறை நிபுணர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவ முடியாத நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக, தென்னிந்திய நகரங்களில் இருந்து UAE வருவதற்கான விமானக் கட்டணம் 1,560 திர்ஹம்களுக்கு மேல் உள்ளது. பெரும்பாலான பயணிகள் குடும்பங்களுடன் பயணம் செய்வதால் இந்த திடீர் விலை உயர்வு அவர்களின் பட்ஜெட்டிற்கு கட்டுபடியாகவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

இது மாதிரியான திடீர் விலையேற்றத்தை கடந்த ஆண்டு குறிப்பாக ஆகஸ்ட் மாத இறுதியில் நாமும் எதிர்கொண்டோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ம் தேதி தமிழகத்தில் இருந்து அமீரகத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஒரு நபருக்கு அதுவும் ஒரு வழி பயணத்திற்கு 2,100 திர்ஹம்ஸ் (45,000 ரூபாய்) செலுத்தி அமீரகம் வந்திறங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!