அமீரக செய்திகள்

அமீரகத்தில் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்..!! ஒரே இரவில் மல்டி மில்லியனராக்கிய மஹ்சூஸ் டிரா..!!

துபாயில் ஒவ்வொரு வாரமும் பல மில்லியன் திர்ஹம்ஸை பரிசாக அள்ளித்தரும் மஹ்ஸூஸ் டிராவில் (Mahzooz Draw) கடந்த வாரம் இந்தியர் ஒருவர் வெற்றி பெற்று முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்டை தட்டிச்சென்றுள்ளார். துபாயில் கட்டிடக்கலை நிறுவனத்தில் பணிபுரியும், 47 வயதான சச்சின் என்பவர் தான் இந்த 20 மில்லியன் திர்ஹம்ஸ் எனும் மிகப்பெரிய பரிசுத்தொகையை வென்ற அதிர்ஷ்டக்காரர் ஆவார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மஹ்ஸூஸ் டிராவில் தீவிரமாக பங்கேற்று, ரேஃபிள்களில் 25,000 திர்ஹம்களுக்கும் மேல் செலவழித்துள்ள சச்சின், இந்த அற்புதமான வெற்றியின் மூலம் இப்போது துபாயில் வசிக்கும் பல மல்டி மில்லினியர்களில் அவரும் ஒருவராகியுள்ளார். மேலும், தனது குடும்ப நிலைமையை சமாளிக்க போராடி வருவதாகவும், இந்த நேரத்தில் பெற்ற வெற்றி தன்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த வெற்றி எனக்கு முழு அதிர்ச்சியாக இருந்தது. இந்த செய்தி எனது அன்றாட வழக்கத்தை மாற்றிவிட்டது, மேலும் மஹ்சூஸ் அதிகாரிகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததில் இருந்து என்னால் தூங்க முடியவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சச்சினுக்கு 20 மில்லியன் திர்ஹம்ஸ் வெற்றியை தேடித்தந்த அதிர்ஷ்ட எண்கள் 2, 9, 10, 15, 36, என்றும், இதனை டிராவிற்கு முன்பு தோராயமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சில நேரங்களில் எனது குழந்தைகள் எண்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், சில சமயங்களில் அதிர்ஷ்ட எண்களாகவோ அல்லது சீரற்ற எண்களாகவோ தேர்ந்தெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசுத் தொகையின் மூலம் தனது குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதாக தெரிவித்த சச்சின், அவரின் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதிசெய்வேன் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். கூடவே, புத்திசாலித்தனமான முதலீடுகளை கருத்தில் கொள்ள விரும்புவதாக கூறியதுடன், முதலீடு மற்றும் செலவு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக துபாயில் ஒவ்வொரு வாரமும் மிகப்பெரிய பரிசுத்தொகையை அளிக்கும் மற்றொரு போட்டியாளரான எமிரேட்ஸ் டிராவின் கடந்த வார FAST5 போட்டியில் இந்தியர் ஒருவரே வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் அடுத்து வரவுள்ள 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25000 திர்ஹம்ஸ் பரிசை அவர் வென்று அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!