அமீரக செய்திகள்

UAE: செவ்வாய்க்கிழமை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு… தூசிகாற்றும் வீச கூடும்..!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்..!!

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) முன்னறிவிப்பின்படி, வார இறுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை வரும் நாட்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அல் அயனில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது முதல் நாட்டில் சீரற்ற வானிலை நிலவுகிறது. சனிக்கிழமையன்று, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மானின் பல பகுதிகளில் மழை, இடி மற்றும் புழுதிப் புயல் தாக்கியது. மேலும், அல் பர்ஷா, அல் மர்மூம், அல் பராரி, அத்துடன் எமிரேட்ஸ் சாலை, அல் குத்ரா சாலை, ஜெபல் அலி-லெஹ்பாப் மற்றும் அல் அய்ன்-துபாய் சாலைகளில் கனமழை பதிவானது. அத்துடன் சாலைகளில் பல வாகனங்களும் இந்த சீரற்ற வானிலையால் சேதமடைந்துள்ளன.

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன் படி, ஆகஸ்ட் 8, செவ்வாய்க்கிழமை வரை சீரற்ற வானிலை நிலவும் என்று பொது மக்களை எச்சரித்துள்ளது. மேலும் அல் அய்ன் மற்றும் அல் அய்னின் தெற்கே உள்ள பகுதிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

வானிலை மையத்தின் கணிப்பின்படி திங்கட்கிழமை மேற்கு பகுதிகளில் ஈரப்பதமாக இருக்கும் என்றும் அதனால் மூடு பனி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கிழக்கு கடற்கரையில் தோன்றும் மேகங்களின் காரணமாக பிற்பகலில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மின்னல் மற்றும் இடியுடன் சில பகுதிகளில் தீவிரமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தென்கிழக்கிலிருந்து, வடகிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகமானது பகல் நேரத்தில் மணிக்கு 10 முதல் 25 கிமீ வேகத்தில் இருக்கும் என்பதால் தூசிகாற்று அதிகமாக வீசும் என்றும் மேலும் இந்த வேகம் 40 கிலோ மீட்டரை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரபு நாட்டில் கோடை மழை பெய்வது என்பது வழக்கம் தான் என்றாலும் தற்பொழுது வானிலை மோசமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!