அமீரக செய்திகள்

அமீரக ரெசிடென்சி விசாவின் தரவை ஆன்லைனில் மாற்றிக்கொள்ள புதிய வசதி அறிமுகம்..!! விபரங்களை வெளியிட்ட ICP..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் விசாவில் உள்ள எந்தத் தகவலையும் மாற்ற வேண்டும் என்றால், அதனை எளிதாக ஆன்லைன் சேவையின் மூலம் மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரெசிடென்சி விசா திருத்தங்களுக்கான கோரிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் எமிரேட்ஸ் ஐடியை மாற்றுவதற்கான விண்ணப்பமும் தானாகவே அந்த சேவையின் கீழ் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் சேவையானது, அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தால் (ICP) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அரபு செய்தி நிறுவனமான அல் கலீஜ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையை ICP ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.icp.gov.ae) அல்லது UAEICP ஸ்மார்ட் ஆப்பில் பெறலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

அமீரகத்தின் இந்த புதிய சேவையில் கீழ் “தனிப்பட்ட தகவல், தொழில், பாஸ்போர்ட் தகவல், அல்லது தேசியம் (புதிய குடியுரிமையைப் பெறும் பட்சத்தில்)” ஆகியவை ஆன்லைனில் மாற்றியமைக்கக்கூடிய குடியிருப்பு விசா தரவுகளில் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்கு விண்ணப்பிக்க, குடியிருப்பாளர்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவை,

  • கலர் புகைப்படம்
  • பாஸ்போர்ட் நகல்
  • ஸ்பான்சரால் கையொப்பமிடப்பட்ட தரவைத் திருத்துவதற்கான கோரிக்கை
  • எமிரேட்ஸ் அடையாள அட்டையின் நகல் (முன் மற்றும் பின்)
  • செயல்முறையை முடிக்க, Dh200 கட்டணம்

இந்த சேவைக்காக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் போதுமான விவரங்கள் அல்லது ஏதேனும் முரண்பாடுகள் காரணமாக ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அல் கலீஜ் வெளியிட்ட அறிக்கையின்படி செலுத்தப்பட்ட பணம் திரும்பப் பெறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!