அமீரக செய்திகள்

மனிதாபிமானத்தை போற்றும் அமீரகம்… சாலையில் இருந்த தடுப்பை அகற்றிய டெலிவரி ரைடருக்கு குவியும் பாராட்டு… செல்லும் இடமெல்லாம் மரியாதை..!!

சில நேரங்களில் நமக்கே தெரியாமல் மனிதாபிமானத்துடன் நாம் செய்யும் நல்ல செயல் நமக்கு நல்ல பெயரை பெற்று தரும். அப்படி ஒரு சம்பவம் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்திருக்கின்றது. அமீரகத்தில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த டெலிவரி ரைடர் வகாஸ் சர்வார் என்பவர் பரபரப்பான ரவுண்டானா சாலையின் குறுக்கே சாலையின் தடுப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு விழுந்திருப்பதை கவனித்து, அதனை ஒதுக்கி யாருக்கும் அசம்பாவிதம் நேராமல் தடுத்திருக்கிறார்.

ஆனால், இந்த செயல் அவருக்கு மிகப் பெரிய பாராட்டினை பெற்று தரும் என்று அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார். அவருக்கே தெரியாமல் யாரோ ஒருவர் இந்த செயலை வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் இதனை கவனித்து அவரது செயலை பாராட்டி உள்ளது.

இது குறித்து அமைச்சகம் ட்விட்டரில் கூறியதாவது, வகாஸ் சர்வார் அவர்களின் நல்ல செயலினை நாங்கள் சமூக ஊடகத்தில் கவனித்தோம். வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக சாலைகளில் உள்ள தடுப்பை அகற்றி அவர் மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றார் என்று பாராட்டினை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வகாசிடம் செய்தியாளர்கள் கேட்டபொழுது, “எனக்கு எது சரி என்று தோன்றியதோ அதைத்தான் நான் செய்தேன். சாலையில் சென்ற பொழுது தடுப்பு இருந்ததை கண்டேன். அதை நான் ஒதுக்காமல் இருந்திருந்தால் எனக்கு பின்னால் வருபவர்களுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும். இவ்வளவு பிரபலமாக இந்த செயல் பேசப்படும் என்று நினைக்கவில்லை. திடீரென்று முகம் தெரியாத ஒருவர் என்னை சந்தித்து இந்த வீடியோவை பற்றி பேசிய பொழுது தான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது. 12 ஆண்டுகளாக அமீரகத்தில் நாட்டில் வசிக்கும் நான் இப்பொழுது இந்த வீடியோ மூலம் பிரபலம் ஆகி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில் “நிறைய பேர் என்னை அழைத்து பரிசுகள் தருகின்றனர். ஆனால் அவற்றை விட அவர்கள் என் மீது காட்டும் மரியாதையே எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது” என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் இதேபோல் மற்றொரு டெலிவரி ரைடர் சாலைகளில் இருந்த கான்கிரீட் தடுப்புகளை அகற்றிய வீடியோ வெளியானதை ஒட்டி துபாயின் பட்டத்து இளவரசர் அவரை அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பல நல்ல உள்ளங்கள் உள்ளனர் என்பதற்கு இதுபோன்ற செயல்களே சான்றாக உள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!