அமீரக செய்திகள்

இந்தியர்களின் பிரபலமான இடமாக மாறிய அமீரகம்..!! 3.5 மில்லியனை தாண்டிய இந்தியர்களின் எண்ணிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனைத் தாண்டியுள்ளது என புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர், வி முரளீதரன், மக்களவையின் கூட்டத்தொடரில், சமீபத்திய இடம் பெயர்வான மக்களின் எண்ணிக்கையை கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

அதில், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 3.419 மில்லியனாக இருந்த இந்தியர்களின் மக்கள் தொகையானது தற்போது 3.554 மில்லியனாக உயர்ந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், வெளிநாடுகளில் வேலை தேடும் இந்திய குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் பிரபலமான இடமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகள் தொடர்ந்து இந்தியத் திறமையாளர்களின் வருகையால் நிரப்பப்பட்டு வருவதால் தற்பொழுது, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும், துபாய், ரியாத், ஜித்தா ஆகிய இடங்களில் இந்திய அரசு வெளிநாட்டு இந்திய உதவி மையங்களை நிறுவியுள்ளதால், இது வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் கூட்டாண்மையை மேலும் நெருக்கமாக்கி, வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு கலாச்சாரம், தொழிலாளர் துறை மற்றும் கல்வி ஆகியவற்றில் உறவுகளை உறுதிப்படுத்துகின்றன. இதையொட்டி கடந்த
பிப்ரவரி 2022 இல், இரு நாடுகளும் இணைந்து ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணெய் அல்லாத வர்த்தகத்தை ஐந்து ஆண்டுகளில் $100 பில்லியன் ஆக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய பொருட்கள் மீதான 80 சதவீத வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அனைத்து கட்டணங்களும் 10 ஆண்டுகளுக்குள் அகற்றப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் தானி அல் ஜெய்யுடி கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!