அமீரக செய்திகள்

அமீரகத்தில் திடீரென பெய்த கனமழையால் சாய்ந்து விழுந்த மரங்கள்.. டிரக் கவிழ்ந்து விபத்து..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் நேற்று திடீரென பெய்த கனமழையால் துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் இருந்த பல மரங்கள் விழுந்து சேதமடைந்துள்ளது. அதிலும் அபுதாபியின் அல் ஐன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பலத்த மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று வீசியதன் காரணமாக சில மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் மழையையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் படம்பிடித்த குடியிருப்பாளர்கள் பலரும் அதனை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக வடக்கு அல் அய்னில் நிலவிய நிலையற்ற வானிலை எவ்வாறு சில போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தியது என்பதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள விடீயோக்களில் காணமுடிகிறது.

அமீரகத்தின் வானிலை கண்காணிப்பு புயல் மையம் பகிர்ந்துள்ள வீடியோ கிளிப்பில், மழையின் மத்தியில் ஒரு மரம் சாலையில் விழுந்ததும் அதன் கிளைகளை டிரக்குகள் மூலம் சாலையில் இருந்து வெளியே இழுத்து சென்று போலீஸார் அப்புறப்படுத்துவதும் காணமுடிகிறது. மேலும் மழை பெய்து சாலைகள் வழுக்கலாக மாறியதால், அல் அய்ன் நெடுஞ்சாலையில் ஒரு டிரக்கும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக துபாய் – அல் அய்ன் சாலையில் அபுதாபி காவல்துறை வேக வரம்பை குறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மணிக்கு 120 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னர் வானிலை நிலையானதும் மாலை 6 மணியளவில் வேக வரம்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

அல் அய்ன் தவிர துபாய் மற்றும் ஷார்ஜாவிலும் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பதிவாகியுள்ளது. நேற்று துபாயின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியது மட்டுமில்லாமல் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளது.

அமீரகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இந்த திடீர் மழை பல குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சீரற்ற காலநிலையின் போது வெளியே செல்லும் போது குடியிருப்பாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by مركز العاصفة (@storm_ae)

Related Articles

Back to top button
error: Content is protected !!