அமீரக செய்திகள்

அமீரகத்தில் விசிட் விசாவில் இருக்கும் போது நண்பர் அல்லது உறவினர் நிறுவனத்தில் வேலை செய்ய முடியுமா..? UAE வேலைவாய்ப்புச் சட்டம் கூறுவது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் வந்து தங்கியிருக்கும் ஒரு வெளிநாட்டவர், வேலை செய்வது தொடர்பாக பின்வருமாறு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். விசிட் விசாவில் தங்கியிருக்கும் நான், எனது நண்பரின் தொழிலை நிர்வகிக்கலாமா? எனக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படுமா? விசிட் விசாவில் இருக்கும் போது நண்பரின் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட பணி அனுமதி (work permit) அவசியமா? என தனது சந்தேகளை கேட்டுள்ளார்.

இவ்வாறான உங்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் வேலை வாய்ப்புச் சட்டம் கூறுவது என்ன? அவ்வாறு விசிட் விசாவில் நண்பரின் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்ய முடியுமா? என்பதற்கான பதில்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 6 (1) இன் படி, தொழிலாளர் அமைச்சகத்திடம் இருந்து ஒர்க் பெர்மிட் எனப்படும் பணி அனுமதி பெறாமல் எந்த ஒரு பணியாளரையும் வேலையில் அமர்த்தவோ அல்லது பணி செய்ய நிர்பந்திக்கவோ கூடாது.

அதுபோல, வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 60 (1) இன் படி, முறையான பணி அனுமதி இல்லாமல் நிறுவனத்திற்கு சம்பந்தம் இல்லாத நபரை பணியமர்த்தினால், அல்லது அடைக்கலமாக வைத்திருந்தால், அவர்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும், மேலும் இதே விதிமீறல் மீண்டும் நடந்தால் மீண்டும் 50,000 திர்ஹம்ஸ் அபராதத்துடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

அதேசமயம், குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 5 (4) இன் படி, ஒரு வெளிநாட்டினர் அமீரகத்திற்கு ஒரு பார்வையாளராக விசிட் விசாவில் வந்து நாட்டில் தங்கி இருக்கும் போது, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி வேலை தொடர்பான எந்த ஒரு செயலிலும் அல்லது முழுநேர வேலையிலும் ஈடுபடக் கூடாது.

அவ்வாறு சட்டத்தை பின்பற்றாமல் எவரேனும் விதிமீறலில் ஈடுபட்டால் அந்த வெளிநாட்டவரை நாடுகடத்த அமீரக நீதிமன்றம் உத்தரவிடும். அதே போல் அவரை வேலைக்கு அமர்த்திய அல்லது மீண்டும் மீண்டும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த வெளிநாட்டவரையும் நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிடும்.

இருப்பினும், மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) நிர்ணயித்துள்ள பல்வேறு வகையான பணி அனுமதியின் அடிப்படையில், ஒரு பணியமர்த்தும் முதலாளியும் பணியாளரும் பரஸ்பரம் அடிப்படையில் பணி அனுமதி பெற ஒப்புக் கொள்ளலாம்.

அமீரகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிக்கபட்ட தொழிலாளர் சட்டத்தின் கீழ், பகுதி நேர பணி அனுமதி, தற்காலிக பணி அனுமதி மற்றும் ஃப்ரீலான்ஸ் பணி அனுமதி போன்றவை தற்போது நடைமுறையில் உள்ளன. இவை 2022 இன் அமைச்சரவை தீர்மானம் எண். 1 இன் பிரிவு 6 இல் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேற்கூறிய சட்ட விதிகளின் படி, நீங்கள் விசிட் விசாவில் இருக்கும் போது உங்கள் நண்பரின் வணிகத்தில் நீங்கள் வேலை செய்யக்கூடாது. மாறாக, உங்கள் நண்பரின் நிறுவனத்திலிருந்து முழுநேர வேலைக்கான பணி அனுமதி அல்லது மேற்கூறிய ஏதேனும் ஒரு பணி அனுமதியை பெற்று, பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நீங்களும் இணைந்து நிர்வகித்துக் கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!