ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லையில் உள்ள, அபுதாபிக்கு உட்பட்ட பகுதியான அல் சிலாவிலிருந்து 558.4 கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டு, ராஸ் அல் கைமா எமிரேட்டில் முடிவடையும் அமீரகத்தின் மிகவும் நீளமான நெடுஞ்சாலைதான் E11 என்று அழைக்கப்படும் மிக முக்கிய சாலை ஆகும்.
இந்த நீண்ட சாலையானது, துபாயில் ஷேக் சையத் சாலை (sheikh zayed road) என்றும், அதுபோல அபுதாபியின் வடக்கே ஷேக் மக்தூம் பின் ராஷித் சாலை (sheikh makthoom bin rashid road) என்றும், அபுதாபியின் தெற்கே சவுதி எல்லை வரை ஷேக் கலீஃபா சர்வதேச நெடுஞ்சாலை (sheikh khalifa international highway) என்றும், ராஸ் அல் கைமாவில் ஷேக் முஹம்மது பின் சலீம் சாலை (sheikh mohammed bin salim road) என்றும் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு எமிரேட்டிலும் வெவ்வேறு பெயரில் அழைக்கப்பட்டாலும், அதன் முழு நீளத்திற்கும் E11 என பொதுவாக அமீரக அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளை நிறப் பின்னணியில் நீல நிறத்தில் உள்ள பருந்தின் படத்தில் மேல் வலதுபுறத்தில் பெரிய எழுத்து “E”, இடதுபுறத்தில் அதற்குச் சமமான ஒரு அரபு எழுத்து மற்றும் கீழே “11” என்ற எண் இதில் இடம்பெற்றிருக்கும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள அந்த படத்தில் “E” என்றால் என்ன? எண் 11 எதைக் குறிக்கிறது? என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கலாம். இந்த சிக்கலான மற்றும் குழப்பமான அமைப்பிற்கு 2018 இல் அபுதாபி போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்ட TR-538 ஆவணத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமீரகத்தில் உள்ள சாலைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்திற்கும் ரூட் எண் சிஸ்டம் கொள்கை மற்றும் நடைமுறைகள் என்ற விரிவான வழிகாட்டி உள்ளது. அந்த வழிகாட்டியில் உள்ள விளக்கத்தின் படி, E என்பது எமிரேட்ஸைக் (Emirates) குறிப்பதாகவும், இது 1995 ம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது நாட்டில் உள்ள தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அதிவேக சாலைகளைக் குறிக்கும் வகையில், “குறைந்தபட்சம் இரண்டு பாதையில் ஒரு மணி நேரத்திற்கு 100 கிலோமீட்டர் வேக வரம்பு அல்லது அதற்கு மேல்” என சாலைக்கான வரம்புகள் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அணுகலைக் குறிப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, E சாலையில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை (primary and secondary) என இரண்டு பிரிவுகளும் உள்ளன. ‘பிரைமரி E’ சாலைகள், E10 முதல் E99 வரையிலான எண்ணிக்கையில் எப்போதும் இரண்டு இலக்கங்களாக இருக்க வேண்டும்.
அதில் இரட்டைப்படை எண்கள் (Even-number) கொண்ட சாலைகள் பொதுவாக அமீரகத்தின் கிழக்கு-மேற்கு அல்லது அரேபிய வளைகுடா கடற்கரைக்கு இணையாக (horizontal) பயணிக்கின்றன. இவை கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி கீழ்நோக்கி எண்ணப்படும். இதற்கு உதாரணம் E10 சாலை ஆகும்.
அதேபோல், ஒற்றைப்படை எண்கள் (Odd-number) கொண்ட சாலைகள் பொதுவாக அமீரகத்தின் வடக்கு-தெற்கு அல்லது அரேபிய வளைகுடா கடற்கரைக்கு செங்குத்தாக (vertical) செல்லும், இவை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மேல்நோக்கி எண்ணப்படும். இதில் ஒன்றுதான் E11 சாலை ஆகும்.
இது தவிர, மூன்று இலக்கங்களைக் கொண்ட ‘செகன்டரி E’ சாலைகளும் அமீரகத்தில் உள்ளன. அவை நாட்டின் வெவ்வேறு இடங்களில் தொடங்கி இறுதியாக முக்கிய சாலைகளில் முடிவடையும் பைபாஸ் பாதைகள் ஆகும். இதற்கு உதாரணம் முஹம்மது பின் சையத் சாலை (E311), எமிரேட்ஸ் சாலை (E611) போன்ற சாலைகள் ஆகும்.
இதில், E க்கு பிறகு வரும் மூன்று எண்களில் முதல் எண் மட்டுமே அந்த சாலையை குறிப்பிடும் தனித்துவமான எண் ஆகும். அதற்கு அடுத்து இருக்கும் மற்ற இரண்டு எண்களும் இந்த சாலை சென்றடையும் பைபாஸ் சாலைகளைக் குறிக்கும். அதாவது E.6.11 என எடுத்துக் கொண்டால், E என்பது பிரதான சாலையையும், 6 என்பது அந்த சாலையின் பிரத்யேக எண்ணையும், 11 என்பது இந்த சாலை இறுதியாக E11 ல் சென்றடையும் என்பதையும் குறிக்கும்.
அமீரக நெடுஞ்சாலைகளில் E அமைப்பைத் தவிர, ஒவ்வொரு எமிரேட்டில் உள்ள உள்ளூர் சாலைகளும் பிரத்யேக எண்களை கொண்டு கணக்கிடப்படுகின்றன. அபுதாபியில் இவை AD சாலைகளாகவும், துபாயில் D சாலைகளாகவும் குறிப்பிடப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.