அமீரக செய்திகள்

கேரளாவில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அடித்த ஃபயர் அலாரம்!! அவசரமாக தரையிறக்கிய விமானி..!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து நேற்று (புதன்கிழமை) காலை துபாய்க்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென ஃபயர் அலாரம் அடித்ததால் விமானம் மீண்டும் திருப்பி விடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா IX 345 என்ற விமானம், 176 பயணிகளுடன் துபாயை நோக்கி பறந்து கொண்டிருந்த போது நடுவானில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளது.

அதாவது, விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தின் சரக்கு பெட்டியில் தீ எச்சரிக்கை விளக்கு (fire alarm) எரிவதை விமானி கவனித்ததாகவும். இதனால் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக அருகிலிருந்த கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அங்கு தரையிறங்கியதும் விமானத்தைச் சோதனை செய்த போது, அலாரம் தவறுதலாக ஒலித்தது உறுதி செய்யப்பட்டதுடன், இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிறுவன அதிகாரிகள் மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகளை துபாய்க்கு அனுப்பி வைத்தனர் எனவும் உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளது.

இதேபோல் கடந்த மாதம், கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு காலை 8:30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் அனைவரும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இரவு 7:06 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!