ADVERTISEMENT

நீருக்கடியில் மிதக்கும் உலகின் முதல் மசூதி.. திட்டத்தை அறிவித்த துபாய்.. வித்தியாசமான தொழுகை அனுபவத்தைக் கொடுக்கும் என தகவல்!!

Published: 21 Sep 2023, 5:39 PM |
Updated: 21 Sep 2023, 5:50 PM |
Posted By: admin

கட்டிடக்கலையிலும் கட்டிட வடிவமைப்பிலும் உலகளவில் பெயர் பெற்ற துபாய், தற்போது நீருக்கடியில் மிதக்கும் உலகின் முதல் மசூதியை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், நீருக்கடியில் கட்டப்படவுள்ள இந்த மசூதி 55 மில்லியன் திர்ஹம் (இந்திய ரூபாய் மதிப்பில் 110 கோடிக்கும் மேல்) செலவில் கட்டமைக்கப்படும் என்றும் இன்று செப்டம்பர் 21, வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து செய்தி ஊடகங்களுக்கு பகிரப்பட்டுள்ள தகவல்களின் படி, மசூதியில் அமைக்கப்படவுள்ள உட்காரும் பகுதிகள் மற்றும் ஒரு காபி ஷாப்புடன் கூடிய கட்டமைப்பின் ஒரு பாதியானது தண்ணீருக்கு மேலேயும், கட்டிடத்தின் மற்றொரு பாதியானது தண்ணீருக்கடியில் மூழ்கியிருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், மூன்று தளங்களுடன் கட்டப்படவுள்ள இந்த மசூதியின் கீழ் தளம், நீருக்கடியில் பிரார்த்தனை செய்யும் இடமாக பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், தொழுகை செய்பவர்கள் நீருக்கடியில் பிரார்த்தனை செய்யும் ஒரு தனித்துவமான அனுபவத்தைப் பெறுவார்கள் என்பது இதன் சிறப்பம்சமாகும். கூடுதலாக, இந்த தளத்தில் ‘உது (Wudu)’ செய்யும் வசதிகள் மற்றும் கழிவறைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கும் துபாயில் புதிதாக மதச் சுற்றுலாவை உருவாக்குவதற்கான திட்டம் பற்றி இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறநிலையச் செயல்பாடுகள் துறை (IACAD) வெளியிட்ட தகவல்களில் இந்த நீருக்கடியில் மிதக்கும் மசூதிக்கான திட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், வெகுவிரைவில் இந்த தனித்துவமான மசூதியின் கட்டுமானம் தொடங்கப்படும் என்றும் IACADயைச் சேர்ந்த அகமது அல் மன்சூரி என்பவர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அத்தடன், இந்த மசூதி கரைக்கு மிக அருகில் அமைக்கப்படும் என்றும், நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக வழிபாட்டாளர்கள் நடக்க முடியும் என்றும் அல் மன்சூர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இருப்பினும், மசூதி அமையவிருக்கும் சரியான இடம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்பாக மிதக்கும் மசூதிகள் இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சவுதி அரேபியாவில் கட்டப்பட்டிருந்தாலும் கட்டிடத்தின் முழுப்பகுதியும் நீருக்கு மேலேயே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் நீருக்கடியில் கட்டப்படவுள்ள உங்களை பிரம்மிக்க வைக்கும் மசூதியின் அழகிய மாதிரி புகைப்படங்களை கீழே காணலாம்.

நீருக்கடியில் அமையவிருக்கும் மசூதியின் மாதிரி புகைப்படம் 1
நீருக்கடியில் அமையவிருக்கும் மசூதியின் மாதிரி புகைப்படம் 2
நீருக்கடியில் அமையவிருக்கும் மசூதியின் மாதிரி புகைப்படம் 3
நீருக்கடியில் அமையவிருக்கும் மசூதியின் மாதிரி புகைப்படம் 4
நீருக்கடியில் அமையவிருக்கும் மசூதியின் மாதிரி புகைப்படம் 5