அமீரக செய்திகள்

ஷாப்பிங் செய்ய இனி அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை… கத்தாரில் முதல் முதலாக காசாளர் இல்லாத செக் அவுட் சேவை அறிமுகம்!

கேசியர் இல்லாமல் இயங்கும் கட்டண சேவையானது கத்தார் நாட்டில் முதன்முதலாக துவங்கப்பட்டுள்ளது. ஹமாத் சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையத்தின் லுலு எக்ஸ்பிரஸ்ஸில் முதன்முதலாக இந்த காசாளர் (cashier) இல்லாத செக் அவுட் சேவையானது கொமர்ஷல் வங்கியின் கட்டண ஏற்பு சேவையுடன் இணைந்து திறக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவின் பொழுது ​​கொமர்ஷல் வங்கியின் குழுமத்தின் அதிகாரி ஜோசப் ஆபிரகாம் மற்றும் லுலு குழும சர்வதேசத்தின் பணிப்பாளர் கலாநிதி மொஹமட் அல்தாப் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த சேவையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டை தட்டி கடைக்குள் நுழையலாம் என்றும் அப்போது கிரெடிட் கார்டினை திரும்ப பெறுவதற்கான பிரத்தியேக QR கோடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பொருளும் ஸ்கேன் செய்வதன் மூலம் தானாகவே டிஜிட்டல் ஷாப்பிங் கார்ட்டில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வாடிக்கையாளர் கடையை விட்டு வெளியேறியதும் ஷாப்பிங் நிறைவடையும். இதனால் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று காசாளருக்கு பணம் செலுத்துவதற்கு கவுண்டரில் அதிக நேரம் காத்திருக்காமலேயே செக் அவுட் சேவை வழங்கப்படுவதால் அதிகப்படியான நேரம் மிச்சமடையும் என கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களிடம் இது நன்கு வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் எதிர்காலத்தில் நாடு முழுவதும் இதே போன்ற சேவைகளை கொண்டு வர கத்தார் முயற்சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கார்டினை பயன்படுத்தி துவங்கப்படும் இந்த சேவையானது எதிர்காலத்தில் பயோமெட்ரிக் அல்லது முக அடையாளங்களை பதிவு செய்து அதன் மூலம் பணம் செலுத்தும் திட்டமானது நடைமுறைப்படுத்த வரும் என தெரிவிக்கப்பட்டது. எனவே அடுத்த கட்டமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இதில் பயன்படுத்தப்படுவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேஷியர் இல்லாத இந்த சேவையில் அனைத்து சர்வதேச கிரெடிட் கார்டுகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால், நாட்டிற்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இந்த கடையானது உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடையின் மேற் கூரையில் பல்வேறு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் ஷாப்பிங் செய்ய வருபவர்களின் அங்க அடையாளங்கள் முதல் உடல் அமைப்பு வரை அனைத்தும் துல்லியமாக கணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சேவையானது நம்பகத்தன்மை வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!