அமீரக செய்திகள்

UAE – கேரளா இடையே பயணிகள் கப்பல் சேவை: 200 கிலோ பேக்கேஜ்.. 450 திர்ஹம்ஸ் கட்டணம்.. டிசம்பரில் சேவையை தொடங்க திட்டம்..!!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேராளா ஆகியவற்றுக்கு இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கப்பல் போக்குவரத்து சேவையானது, இந்திய வெளிநாட்டவர்களுக்கு குறைந்த செலவில் வசதியான பயண சேவையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள முதற்கட்ட தகவல்களின் படி, கப்பல் பயணத்திற்கான டிக்கெட்டுகளின் விலை சுமார் 442 திர்ஹம்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்த சேவை மூலம், பயணிகள் மூன்று நாட்களில் கேரளாவை அடையலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது பற்றி ஷார்ஜாவின் இந்திய சங்கத்தின் தலைவர் YA ரஹீம் என்பவர் தெரிவிக்கையில், நடப்பு ஆண்டு இறுதிக்குள் குறிப்பாக, டிசம்பரில் பள்ளி விடுமுறைக்கு முன்பாக இந்த சேவையை தொடங்க திட்டம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இதற்கு இந்தியாவின் மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது முக்கியமான செயல்முறை என்பதால் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இந்திய அரசாங்கத்தால் இந்த திட்டத்திற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கப்படுமா என்பது பற்றி தெரியவில்லை என்றும், அனுமதி கிடைத்தால் நவம்பர் மாதத்திற்குள் சோதனை ஓட்டம் தொடங்கலாம் என்றும் ரஹீம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் விரைவில் வரவிருக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள் அனைத்தையும் இங்கே பார்க்கலாம்:

சேவையின் சிறப்பம்சங்கள்:

இந்த கப்பல் ஒரே நேரத்தில் 1,250 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது மற்றும் மூன்று நாட்களில் பயணத்தை முடிக்கலாம். பயணிகளுக்கான இந்த கப்பலில் எக்கச்சக்கமான உணவு வகைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும். குறிப்பாக, பயணிகள் 200 கிலோ வரையிலான சாமான்களை இந்த பயணத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

டிக்கெட் கட்டணம்:

பயண சீசனைப் பொறுத்து, கப்பல் சேவையின் டிக்கெட் விலை மாறுபடும் என்று கூறப்படுகிறது. பொதுவாக, டிக்கெட் விலை 442 திர்ஹம் (Rs10,000) முதல் 663 திர்ஹம் (Rs15,000) வரை இருக்கும். பீக் ஹவர்ஸில் டிக்கெட் விலைகள் உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவையின் வழித்தடம்:

இந்தக் கப்பல் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான கேரளாவின் கொச்சி (Kochi) துறைமுகம் மற்றும் கோழிக்கோட்டில் அமைந்துள்ள பேப்பூர் (Beypore) துறைமுகம் ஆகிய இரண்டு இடங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில் மூன்றாவது இடமாக விழிஞ்சம் துறைமுகம் (Vizhinjam port) இடம்பெறும் என்று ரஹீம் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை முன்னின்று செயல்படுத்துவது யார்?

இந்த லட்சியத் திட்டமானது, ஷார்ஜா இந்தியன் அசோசியேஷன், அனந்தபுரி ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து கேரள அரசின் ஆதரவோடும், கேரள அரசின் ஒரு துறையான நோர்கா (NORKA) ஆதரவோடும் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு எவ்வளவு?

பயணிகள் கப்பல் சேவை திட்டம் குறித்து விவாதிக்க திருவனந்தபுரத்தில் கேரள கடல்சார் வாரியம் (KMB) மற்றும் மலபார் மேம்பாட்டு கவுன்சில் (MDC) இணைந்து நடத்திய கூட்டத்தில் பேசிய கேரளாவின் துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில் அவர்கள், வெளிநாட்டில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் விடுமுறை நாட்களில் தாயகம் திரும்ப விமான பயணத்திற்கு பெரும் தொகையை ஒதுக்க வேண்டியிருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

எனவே, அதற்கு மாற்று வழியாக குறைந்த செலவில் கப்பல் போக்குவரத்தை தொடங்க வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகளும், கேரளாவில் உள்ள முக்கிய தலைவர்களும் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருவதால், வெகுவிரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று ரஹீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

UAE மற்றும் கேரளா இடையேயான பயணிகள் கப்பல் சேவைக்கு கேரள மக்கள் கோரிக்கை வைப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் இவ்விரு இடங்களுக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்க முயற்சிகள் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நடைமுறைக்கு வந்தால் அது அமீரகத்தில் வாழும் மலையாளிகளுக்கு மட்டும் இல்லாமல், கேரளாவை ஒட்டியுள்ள தென் தமிழக மாவட்டங்களை தமிழக மக்களுக்கும் மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!