அமீரக செய்திகள்

UAE: கிரெடிட் கார்டு, லோன் போன்ற கடன் தொல்லையா..? அதிக வட்டியை எப்படி தவிர்ப்பது என்ற குழப்பமா.? கடன் ஆலோசகர்கள் பகிர்ந்த உத்திகள் இதோ..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏதேனும் ஒரு தேவைக்காக வங்கியில் கடன் பெற்றவரா நீங்கள்? அதிக வட்டியை தவிர்க்க கடன்களை எப்படி செலுத்த வேண்டும் என்று குழப்பமா.? உங்களின் கடன்களை பெரிய இழப்பு இல்லாமல் செலுத்தும் முறை பற்றியும், கடன் நிலுவைகளை செலுத்தும் வரிசைமுறை பற்றியும் அமீரகத்தில் உள்ள கடன் ஆலோசகர்கள் விளக்கியுள்ளனர். அது பற்றிய விரவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வங்கிகளில் கடன் பெற்று ஒவ்வொரு மாதமும் தங்கள் முழு கடன் நிலுவையையும் செலுத்தாதவர்களிடையே நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வுகளில், மக்கள் தங்கள் கடனை செலுத்துவதற்கு பயனற்ற உத்திகளை கடைபிடித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடனை அடைப்பதில் தெளிவான முறையை பின்பற்றாமல் அதிக பணத்தை கூடுதல் வட்டியாக செலுத்துவது தெரியவந்துள்ளது.

உதாரணமாக, ஒருவர் ஒரு கடனில் 10,000 திர்ஹமும் மற்றும் மற்றொரு கடனில் 5,000 திர்ஹமும் செலுத்த வேண்டும் என்ற சூழலில், ஒவ்வொரு கடனுக்கும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தும்போது, அது அவரை இன்னும் அதிக வட்டியை செலுத்துவதற்கு வழி வகுக்கும் என்று கடன் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகத் தொகையுள்ள கடனை முதலில் அடைப்பது சிறந்ததா?

எந்தக் கடனை முதலில் அடைக்க வேண்டும் என்பதற்கான பதில், ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாங்கிய கடன் வகையைப் பொறுத்து மாறுபடும். மேலும், எந்த கடனை முதலில் செலுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் போது, பாதுகாப்பற்றது எது அல்லது அதிக வட்டியுள்ள கடன்களை எப்போது செலுத்த வேண்டும் என்பது உட்பட முக்கிய சில விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆய்வுகளில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, பெரும்பாலான மக்களுக்கு அதிக வட்டியுள்ள கடன்களை முதலில் அடைப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, இவை பொதுவாக கிரெடிட் கார்டுகள் மற்றும் பெர்சனல் லோன் போன்ற பாதுகாப்பற்ற கடன்களாகும் (unsecured debt). அதே போன்று கல்விக் கடன்களும் பாதுகாப்பற்ற கடன் என்றாலும் அவை எப்போதும் குறைந்த வட்டி விகிதங்களுடன் இருக்கும்.

எனவே, குறைந்த சதவீத வட்டி விகிதத்தில் இருக்கும் கல்விக் கடனைக் காட்டிலும், இரு மடங்கிற்கும் மேலாக அதிக சதவீத வட்டியில் இருக்கும் 5,000 திர்ஹம் கிரெடிட் கார்டு கடனை செலுத்துவது புத்திசாலித்தனமானது என்றும் இதன் மூலம் அதிக பணத்தைச் சேமிக்க முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் சில நேரங்களில் குறைந்த வட்டி விகிதங்களை முதலில் அடைப்பது சிறந்தது என்றும், சிறிய கடனை முழுவதுமாகச் செலுத்துவது மற்ற கடன்களைத் தொடர்ந்து அடைப்பதற்கு ஊக்குவிக்கும் என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட கடனை அடைக்க குறைந்தபட்ச பணம் (minimum payment) செலுத்தினால், அவற்றை முழுமையாக செலுத்துவதற்கு பல வருடங்கள் ஆவதுடன் அதிகமான பணத்தை வட்டியாக செலுத்த வேண்டும் என்றும் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடனை அடைக்கும் உத்திகள்:

எப்போதும், மிகச்சிறிய கடனை கூடிய விரைவில் செலுத்துவதற்கு ‘Debt snowball method’ எனும் முறையைப் பயன்படுத்தலாம். அந்தக் கடனைச் செலுத்தியவுடன், அடுத்துள்ள சிறிய கடனை அடைக்க வேண்டும். அனைத்து கடன்களும் அடைக்கப்படும் வரை இந்த செயல்முறை தொடரும்.

‘avalanche method’ என்பது மற்றொரு முறை ஆகும். இந்த முறையின்படி, முதலில் அதிக வட்டி விகிதத்தில் இருக்கும் கடனை செலுத்த வேண்டும். மற்ற முறைகளைப் போலவே, அதிக வட்டிக் கடனை அடைத்தவுடன் அதற்கு அடுத்துள்ள அதிக வட்டிக்கடனை அடைக்க வேண்டும்.

இந்த இரண்டு உத்திகளில் எது சிறந்தது என்ற அடிப்படையில் பார்க்கும் போது, ‘Debt snowball method’ முறையின் மூலம், கடனாளி அதிகப் பணத்தைச் சேமிக்க முடியாது. ஆனால், தனது அடுத்தடுத்த கடன்களை அடைக்க இது உந்துதலாக இருக்கும்.

அதுபோல, ‘avalanche method’ மூலம் மிகவும் விலையுயர்ந்த கடன்களில் கவனம் செலுத்தும் போது, நீங்கள் காலப்போக்கில் குறைவான கடன்களை செலுத்த வேண்டும் என்பது நிம்மதி உணர்வைத் தரும். இந்த முறையில் நீங்கள் சிறிது பணத்தையும் சேமிக்கலாம்.

பாதுகாக்கப்பட்ட கடன்கள் (secured debt):

கடன் வாங்கும் ஒருவரின் கடன் அவரிடம் உள்ள ஒரு சொத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், அது பாதுகாக்கப்பட்ட கடன் எனப்படும். உதாரணமாக, ஒருவரின் வாகனக் கடன் அவரிடம் உள்ள காரால் பாதுகாக்கப்படுகிறது. அதேபோன்று வீட்டை அடமானம் வைத்து பெறப்படும் கடன் வீட்டால் பாதுகாக்கப்படுகிறது.

ஒருவேளை, கடனாளி அவரது வாகனக் கடனை செலுத்தவில்லை என்றால், அவரது காரை கடன் வழங்கியவர் கைப்பற்றலாம். அதுபோலவே, அடமானத்தில் பணத்தை செலுத்தத் தவறினால், கடன் வழங்கியவர் அவரது வீட்டை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், கிரெடிட் கார்டில் ஒருவர் பெறும் கடனை செலுத்தவில்லை என்றால், அந்த கார்டை வழங்கிய நிறுவனம் கடனாளியின் எந்த சொத்தையும் கைப்பற்ற முடியாது. அதற்கு மாறாக, தாமதமாக பணம் செலுத்தும் அபராதம் (late payment penalties), கிரெடிட் ஸ்கோர் வீழ்ச்சி போன்றவற்றின் மூலம், கடனாளிக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!