அமீரக செய்திகள்

தனியார் துறைக்கான அமீரகத்தின் புதிய ‘End of Service’ முதலீட்டு திட்டம்: கட்டாயமா? கிராஜுவிட்டி எப்படி முதலீடு செய்யப்படும்? அனைத்து விளக்கங்களும் இங்கே…

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 4 அன்று அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள இறுதிச் சேவைப் பலன்களுக்குப் (end of service benefits) பதிலாக, புதிய இறுதிச் சேவை விருப்ப முதலீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அரசுத் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கக்கூடிய இறுதிச் சேவை முதலீட்டுத் திட்டத்தைப் போலவே, தனியார் துறை மற்றும் இலவச மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இறுதிச் சேவை விருப்ப முதலீட்டுத் திட்டத்திற்கு தற்போது அமீரக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இத்திட்டம் யாருக்கெல்லாம் கட்டாயம், இது யாருக்கானது, உங்கள் கிராஜுவிட்டி எப்படி முதலீடு செய்யப்படும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கே தெளிவாகப் பார்க்கலாம்:

இறுதிச் சேவை முதலீட்டுத் திட்டத்தில் சேருவது கட்டாயமா?

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஷேக் முகமது அவர்கள் இந்த திட்டத்தில் முதலாளிகள் சேருவது அவர்களின் விருப்பம், கட்டாயமில்லை என்று கூறியதாக UAE அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த துறைகளுக்கானது?

இறுதிச் சேவை கிராஜுட்டிக்கான இந்த புதிய திட்டம் தனியார் துறை மற்றும் இலவச மண்டல (Free Zone) ஊழியர்களுக்கானதாகும். மேற்கூறியபடி, இந்த அமைப்பில் முதலாளிகளின் விருப்பத்தின் படி முதலீடு செய்யலாம்.

மேலும், மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்துடன் (MOHRE) ஒருங்கிணைந்து பத்திரங்கள் மற்றும் பொருட்கள் ஆணையத்தால் (Securities and Commodities Authority) மேற்பார்வையிடப்படும் தனியார் துறை முதலீடுகள் மற்றும் சேமிப்பு நிதிகளை நிறுவுதல் ஆகியவை இதில் அடங்கும்.

அதுமட்டுமின்றி, சேமிப்பு மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக தனியார் துறை ஊழியர்கள் மட்டுமில்லாது அரசுத் துறை ஊழியர்களும் இந்த முதலீட்டு திட்ட அமைப்பில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கான தற்போதைய இறுதிச் சேவைத் திட்டம் என்ன?

ஒரு நிறுவனத்தில் ஒரு வருட தொடர்ச்சியான சேவையை முடித்த ஒரு ஊழியர், இறுதி சேவை பலன்களை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவார். அந்த வகையில், ஊழியரின் சேவை ஆண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்த இறுதி சேவை தொகை கணக்கிடப்படும்.

புதிய இறுதி-சேவை முதலீட்டு திட்டம்:

இந்த விருப்பத் திட்டத்தில் பங்குபெறும் நிறுவனங்கள் மாதாந்திரப் பங்களிப்பைச் செலுத்த வேண்டும் மற்றும் அவர்களது சேவையின் முடிவில், பணியாளர்கள் தாங்கள் கட்டிய சேமிப்புத் தொகையையும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் பெறுவார்கள். மேலும், ஊழியர்கள் அவர்களின் முதலீட்டு விருப்பங்களுக்கு ஏற்றவாறு தங்கள் சேவையின் இறுதிப் பலன்களை முதலீடு செய்து சேமிக்க முடியும். எளிமையாகச் சொன்னால், ஊழியர்களின் சேமிப்பைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சேவையின் இறுதித் தொகை எவ்வாறு முதலீடு செய்யப்படுகிறது?

பணத்தை முதலீடு செய்ய மூன்று விருப்பங்கள் உள்ளன:

  • மூலதனத்தை பராமரிக்கும் ஆபத்து இல்லாத முதலீடு
  • ஆபத்து அடிப்படையிலான முதலீடு
  • ஷரியா-இணக்கமான முதலீடு.

Related Articles

Back to top button
error: Content is protected !!