அமீரக செய்திகள்

17 மணி நேர பயணத்திற்குப் பின் பத்திரமாக பூமியில் இறங்கி வரலாறு படைத்த சுல்தான் அல் நெயாடி…!! குவியும் வாழ்த்துகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 6 மாத கால பயணமாக விண்வெளிக்குச் சென்ற விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாடி, தனது மிக நீண்ட  விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமிக்கு திரும்பியுள்ளார். அவர் சுமார் 17 மணிநேர பயணம் மேற்கொண்ட ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், இன்று (செப்டம்பர் 4, திங்கட்கிழமை), ஃபுளோரிடா கடற்கரையில் உள்ள தம்பாவிற்கு அருகே சுமார் 8.17 (UAE நேரம்) மணிக்கு இறங்கியதாக கூறப்பட்டுள்ளது.

அல் நெயாடி மற்றும் அவரது க்ரூ 6 தோழர்களை (நாசா விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன் மற்றும் வூடி ஹோபர்க் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் Andrey Fedyaev) சுமந்து வந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது அதன் வேகம் குறைந்த பிறகு பாராசூட்களை வெளியிட்டு பத்திரமாக தரையிறங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதே போன்று வெற்றிகரமாக பூமியில் இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள அட்லாண்டிக் கடலில் இறங்கிய டிராகன் காப்ஸ்யூலை மீட்க spaceX கப்பல் வந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பரிசோதனைகள் முடிக்கப்பட்டு விண்வெளி வீர ர்கள் இருக்கும் டிராகன் கேப்சூல் திறக்கப்பட்டு அதிலிருந்து வீரர்கள் மீட்புக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆறு மாத கால விண்வெளி பயணத்தை முடித்து வந்த சுல்தான் அல் நெயாடி மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மூன்று வாரங்களாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் மூலம் அரபு நாடுகளில் இருந்து விண்வெளிக்குச் சென்று ஆறு மாத காலம் தங்கிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுல்தான் அல் நெயாடி. அவருக்கு தொடர்ந்து அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!