ADVERTISEMENT

இது பஸ்ஸா இல்ல Tram ஆ? அபுதாபியை கலக்கும் புதிய வகை வாகனம்.. பயன்பாட்டிற்கு வந்த ART.. அனைத்து விபரங்களும் இங்கே..!!

Published: 9 Oct 2023, 8:29 PM |
Updated: 11 Oct 2023, 5:35 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் தண்டவாளங்கள் இல்லாத சாலைகளில், துபாய் டிராம் போன்ற வடிவமும், சாதாரண பேருந்துகளை விட அதிக நீளமும், டயர்கள் வெளியே தெரியாத அளவிற்கு தாழ்வான அமைப்பும் கொண்ட புதிய வகையான பேருந்துகள் இயங்குவதைக் கண்டு குடியிருப்பாளர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.

ADVERTISEMENT

ஏனெனில் இந்த வகையான பேருந்து அமீரகத்திலேயே முதன் முதலில் அபுதாபியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக ART பேருந்து என்று அழைக்கப்படும் இந்த நவீன மற்றும் நேர்த்தியான ஆட்டோமேட்டட் ரேபிட் போக்குவரத்து (Automated Rapid Transit – ART) சேவையானது, தற்போது அபுதாபி சிட்டியில் உள்ள ரீம் மால் மற்றும் மெரினா மாலுக்கு இடையே எலெக்ட்ரா ஸ்ட்ரீட் என அழைக்கப்படும் சையத் ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட் வழியாக இரு தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதன்முதலில் அபுதாபியின் யாஸ் ஐலேண்ட் மற்றும் சாதியாத் ஐலேண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ART  சேவையானது, தற்போது அபுதாபி சிட்டியிலும் தனது சேவையை தொடங்கியுள்ளது. மேலும் இந்த புதிய வகை பேருந்து சேவை வாரத்தின் விடுமுறை நாட்களில் அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பயணிகளுக்கான மூன்று கேரேஜ்களைக் கொண்டுள்ள இந்த குளிரூட்டப்பட்ட எலெக்ட்ரிக் வாகனம், பிரபலமான வழித்தடங்களில் நியமிக்கப்பட்ட முக்கிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தப்படுகிறது. அத்துடன் இதில் பயணிகள் ஏறுவதற்காக ஓட்டுநர் காத்திருக்கும்போது எச்சரிக்கை மணி ஒலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

வழக்கமான பேருந்து மற்றும் டிராம் ஆகியவற்றின் கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ART வாகனத்தால், ஒரே சமயத்தில் சுமார் 200 பயணிகளுக்கு இடமளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அதிகளவிலான பயணிகளுக்கு இந்த புதிய வாகனத்தால் சேவை வழங்க முடியும்.

இதன் உட்புறத் தோற்றமானது, மெத்தை போன்ற இருக்கைகள், நிற்கும் பயணிகள் பிடித்துக்கொள்ள பட்டைகள், வெளியில் பாரப்பதற்கு ஏற்றவாறு பெரிய வடிவிலான பனோரமிக் ஜன்னல்கள் மற்றும் அடுத்து வரவிருக்கும் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்புகள் என துபாய் மெட்ரோவில் உள்ளது போன்ற உணர்வைக் கொடுக்கும்.

வாகனத்தின் வெளிப்புறமானது, முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்துத் துறையின் (DMT) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (ITC) அடையாளங்களுடன், பார்ப்பவர்களின் கண்ணைக் கவரும் வகையிலான வடிவத்திலும், நிறத்திலும் இருப்பதையும் காணலாம்.

மேலும், நகரத்தில் ARTகளை நிறுத்துவதற்கென சில பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ART நிறுத்தங்கள் நடைபாதையில் பிரத்யேக ஸ்டிக்கர்களால் குறிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில், இது வழக்கமான பொது பேருந்து நிலையங்களிலும் நிறுத்தப்படும்.

அபுதாபி நகரின் சமீபத்திய ஸ்மார்ட் மொபிலிட்டி சலுகையைப் பற்றி பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேருந்து நிறுத்தத்தில் ART யின் உடற்பகுதி வரைபடமும் இடம்பெற்றுள்ளது.

கார்பன் உமிழ்வு இல்லாத புதுமையான சேவை:

அபுதாபி நகரின் சாலைகளில் எந்தவொரு தண்டவாளங்கள் அல்லது உள்கட்டமைப்பு மாற்றங்களையும் செய்யாமல், திடீரென இத்தகைய ஸ்மார்ட் மொபிலிட்டி சேவையைத் தொடங்கியிருப்பது குடியிருப்பாளர்கள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிக போக்குவரத்து நேரங்களில் (peak hours) பொதுப் பேருந்துகளில் காணப்படும் அதிகளவிலான கூட்டத்திற்கு இது போன்ற சேவை ஒரு அற்புதமான தீர்வாகும் என்றும் குடியிருப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தண்டவாளங்கள் இல்லாத ARTகள், தற்போது ரீம் மால் மற்றும் மெரினா மால் ஆகியவற்றை கலேரியா அல் மரியா ஐலேண்ட், மெரினா சதுக்கம், ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் மசூதி, கஸ்ர் அல் ஹோஸ்ன், கலிதியா பார்க், அபுதாபி எனர்ஜி சென்டர் போன்ற பிரபலமான இடங்கள் வழியாகவும் இயக்கப்படுகிறது.

கூடவே, ஷேக்கா பாத்திமா பார்க், கார்னிச், NMC ஸ்பெஷாலிட்டி மற்றும் LLH போன்ற மருத்துவமனைகள் வழியாகவும், மற்றும் சிட்டி சீசன்ஸ் அல் ஹம்ரா, ஷெரட்டன் அல் கலிதியா மற்றும் ரிக்சோஸ் மெரினா அபுதாபி போன்ற ஹோட்டல்கள் வழியாகவும் இந்த ART வாகனங்கள் செல்கிறது.

ART பேருந்து இயங்கும் நேரம்:

இந்த நவீன போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்த விரும்புபவர்கள், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Google Maps மற்றும் சேவையின் அதிகாரப்பூர்வ ஸ்மார்ட் செயலியான Darbi மூலம் நேரலை நேரத்தைக் கண்காணிக்கலாம்.

ரீம் மாலில் இருந்து முதல் பயணம் காலை 10 மணிக்கும் கடைசி பயணம் மதியம் 2 மணிக்கும் உள்ளது மற்றும் மெரினா மாலில் இருந்து சேவை காலை 11 மணிக்கும், இறுதிப் பயணம் மாலை 3 மணிக்கும் தொடங்குகிறது.

கூடுதலாக, சேவை, நேரம் மற்றும் புதிய இடங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய, பயணிகள் ARTகளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel