அமீரக செய்திகள்

2023-24ம் ஆண்டிற்கான ‘துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்’ துவங்கும் தேதிகளை வெளியிட்ட DFRE..!! எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு..!!

அமீரகக் குடியிருப்பாளர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 29வது சீசன் வெகுவிரைவில் தொடங்க உள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி 2023-24ம் ஆண்டுக்கான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் சீசன் டிசம்பர் மாதம் துவங்க இருப்பதாக துபாய் பெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடெயில் நிறுவனம் (DFRE) தெரிவித்துள்ளது.

DFREயின் அறிவிப்பின்படி,  குடியிருப்பாளர்களை உற்சாகத்தில் மூழ்கச் செய்யும் துபாயின் வருடாந்திர ஷாப்பிங் ஃபெஸ்டிவல், எதிர்வரும் டிசம்பர் 8, 2023 முதல் தொடங்கி ஜனவரி 14, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் இந்தாண்டு பதிப்பானது, முந்தைய பதிப்புகளை விட பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று DFREயின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பிரபலமான தெரு-கலாச்சார திருவிழாவான Sole DXB டிசம்பர் 8 முதல் 10 வரை துபாய் டிசைன் மாவட்டத்தில் (Dubai Design District) நடைபெறும் தொடக்கக் கொண்டாட்டங்களில் முதன்முறையாக DSF வரிசையில் இணைவதாகவும், அத்துடன் இந்த ஆண்டு ஹிப் ஹாப் இசையின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நேரடி நிகழ்ச்சிகளும் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு ஃபெஸ்டிவலின் 38 நாட்களில், டிசம்பர் 15, 2023 அன்று Coca-Cola அரங்கில் நடைபெறும் அரபு உலகின் மிகச் சிறந்த கலைஞர்களான அஹ்லம் அல்ஷாம்சி மற்றும் அஸ்ஸலா நஸ்ரி ஆகியோர் கலந்து கொள்ளும் இசைக் கச்சேரியை பார்வையாளர்கள் நேரடியாகக் கண்டுகளிக்கலாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, இந்த விழாவில் சர்வதேச மற்றும் பிராந்திய இசைக்கலைஞர்கள் மற்றும் பேச்சாளர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகள், கூடைப்பந்து போட்டிகள், பேச்சுக்கள் மற்றும் பிரத்யேக ஷாப்பிங் என குடியிருப்பாளர்களை குஷிப்படுத்தும் எண்ணற்ற நிகழ்வுகள் மற்றும் துடிப்பான அனுபவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் துபாய் முழுவதும் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பிரத்யேக கச்சேரிகளை கண்டுகளிப்பதுடன் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் உலகின் முன்னணி பிரேண்டுகள் வழங்கும் அதிரடி தள்ளுபடிகளையும் அனுபவித்து மகிழலாம் எனவும் துபாய் பெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடெயில் நிறுவனம் (DFRE) தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!