அமீரக செய்திகள்

UAE – முசந்தம் இடையே அக்டோபர் 6 முதல் பேருந்து சேவை.. 50 திர்ஹம்ஸ் கட்டணம்.. முன்பதிவு, நேரம் போன்ற அனைத்து விபரங்களும் உள்ளே…

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஓமானில் உள்ள   முசந்தம் பகுதிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு இனி கவலையே வேண்டாம். இயற்கை எழில் சூழ்ந்த ஓமானின் முசந்தம் பகுதிக்கு சென்று அமீரக குடியிருப்பாளர்கள் சுற்றிப்பாரக்க வசதியாக மிகவும் குறைவான கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து சேவை நாளை முதல் பயண்பாட்டிற்கு வரவுள்ளது.

ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) X தளத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, நாளை அக்டோபர் 6ஆம் தேதி முதல் முசந்தம் மற்றும் ராஸ் அல் கைமா இடையே புதிய சர்வதேச பொதுப் பேருந்து சேவையை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் அமீரக குடியிருப்பாளர்கள் முசந்தம் கவர்னரேட்டில் உள்ள மலைகளால் சூழப்பட்ட நீல வண்ணத்தில் காட்சியளிக்கும் நீர்நிலைகளில் சுற்றிப்பார்ப்பதுடன் குளித்தும் மகிழலாம்.

ராஸ் அல் கைமா மற்றும் ஓமானிற்கு இடையே இயக்கப்படவுள்ள இந்த சர்வதேச புதிய பேருந்து வழித்தடம் ராஸ் அல் கைமா எமிரேட்டை ஓமன் சுல்தானகத்தில் உள்ள முசந்தம் கவர்னரேட்டுடன் இணைப்பதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான பயணிகள் நடமாட்டத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் விலை மற்றும் பேருந்து நேரம்:

ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) முன்னதாக வெளியிட்ட விவரங்களின் படி, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி மற்றும் மாலை 6 மணிக்கு இந்த பேருந்து சேவை கிடைக்கும். இதன் மொத்த பயண நேரம் தோராயமாக 3 மணிநேரம் ஆகும்.

மேலும், இதில் ஒரு வழி பயண டிக்கெட்டிற்கு 50 திர்ஹம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சொந்த வாகனங்களின் மூலமாகவோ அல்லது டூர் ஆபரேட்டர் மூலமாகதான் முசந்தம் சென்று சுற்றிப்பார்க்க முடியும். ஆனால் தற்போது குறைந்த கட்டணத்தில் இயக்கப்படவுள்ள இந்த பேருந்து சேவை குடியிருப்பாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் எனவும் கூறப்படுகிறது.

அத்துடன் பயணிகள் RAKTA இன் அதிகாரப்பூர்வ இணையதளம், RAKBUS ஆப், பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்து இந்த பயணத்தை அனுபவிக்கலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த புதிய பேருந்து சேவையானது, ராஸ் அல் கைமாவில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் தொடங்கி விலையாத் ஆப் கசாபில் (Wilayat of Khasab) முடிவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!