அமீரக செய்திகள்

துபாயில் நடைபெறும் COP28 மாநாட்டில் பங்கேற்க அமீரகம் வந்தடைந்த இந்திய பிரதமர் மோடி..!!

துபாயில் நடைபெற்று வரும் COP28 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்தார். இந்தியாவிலிருந்து தனி விமானம் மூலம் அமீரகம் வந்த பிரதமர் மோடியை அமீரகத்தின் இரண்டாவது துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வரவேற்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக நடத்தப்படும் இந்த காலநிலை மாற்ற மாநாடு (COP28) துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் தொடங்கி டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது. மேலும் இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல முக்கிய தலைவர்கள் பங்குபெறவுள்ளனர்.

துபாய் வந்தடைந்தது குறித்து பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “COP28 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக துபாயில் தரையிறங்கினேன். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய பிரதமரின் இந்த துபாய் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், உலகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார் என்றும், காலநிலை நடவடிக்கையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகளில் அவர் பங்கேற்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!