ADVERTISEMENT

துபாய் கனமழை எதிரொலி: 1,000 வாகனங்கள் சேதம்.. ஒரே நாளில் காவல்துறைக்கு வந்த 25,000 அழைப்புகள்..!!

Published: 14 Feb 2024, 7:41 AM |
Updated: 14 Feb 2024, 7:43 AM |
Posted By: admin

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவி வரும் மோசமான வானிலையால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து அமீரகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றில் சுமார் 1,000 வாகனங்கள் துபாயில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை துபாய் காவல்துறை வழங்கிய மின்னணு சான்றிதழ்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

ADVERTISEMENT

வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் வாகனங்கள் சேதமடைந்த குடியிருப்பாளர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து இன்சூரன்ஸ் கோருவதற்கு தங்கள் வாகனங்களில் உண்மையாகவே பழுது ஏற்பட்டிருப்பதை நிரூபிக்கவும் சம்பவ அறிக்கைகளில் சூழ்நிலைகளை நிறுவவும் மின்னணு ‘To Whom It May Concern’ என்ற சான்றிதழை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

துபாய் காவல்துறையின் செயற்கை நுண்ணறிவுப் பொதுத் துறையின் இயக்குநர் காலித் நாசர் அல்ராஸூகி கூறுகையில், “இந்த தானியங்கி சேவை தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 1,000 இ-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த சான்றிதழுக்கான விண்ணப்பம் துபாய் போலீஸ் செயலி மற்றும் இணையதளத்தில் நீண்ட காலமாக உள்ளது. ஆனால் சேதத்திற்கான காரணத்தை சரிபார்க்க வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ஆய்வுக்காக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற செயல்முறை இருந்து வந்தது.

ஆனால் இப்போது, ​​காவல் நிலையத்திற்கு வாகனங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லாமல் துபாய் காவல்துறையின் இணையதளத்தில் சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பதிவேற்றி 95 திர்ஹம்ஸ் செலுத்தி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் 901ஐ அழைப்பதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் துபாயில் பெய்த மழையின் காரணமாக திங்களன்று 25,000 க்கும் மேற்பட்ட அவசர மற்றும் அவசரமற்ற அழைப்புகள் துபாய் காவல்துறைக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் அவசர எண்ணான 999 க்கு 21,300 அழைப்புகளும், அவசரமற்ற அழைப்பு மையமான 901 க்கு 3,807 அழைப்புகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel