ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மாணவர்களுக்கான கலை விழா 2024..!!

Published: 9 Feb 2024, 7:02 PM |
Updated: 9 Feb 2024, 7:02 PM |
Posted By: admin

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில், கடந்த வாரம் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர் கலை விழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. ரியாத் தமிழ்ச் சங்கம் வருடந்தோறும் தமிழ் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கல்வி, விளையாட்டு, (கலை) தனித்திறன் போன்ற சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிப்பது வழக்கமாகும்.

ADVERTISEMENT

அந்த வரிசையில் இவ்வருடமும் ரியாத்தில் உள்ள 9 இந்திய பன்னாட்டுப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவ/மாணவிகள் பெருவாரியாகப் பங்கு கொண்ட மாணவர் கலைவிழா 2024 நிகழ்ச்சி, 02-02-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில், வெகுவிமர்சையாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலையிலும், இலங்கைத் தூதர் தலைமையிலும், இந்திய பன்னாட்டுப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

இதில் பல பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வழக்கமான பேச்சு, இசை, நடனம், நடிப்பு மட்டுமின்றி, பாவனை நாடகம் (Mimes) குறும்படம் மற்றும் டிஜிட்டல் கலைகள் போன்ற புதுமையான திறமைகளையும் அரங்கேற்றி கேடயம், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றனர்.

ADVERTISEMENT

இக்கலை விழா தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைவடிவங்கள் மற்றும் பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்த்ததாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தங்களது குழந்தைகளின் திறமைகளை வெளிகாட்ட உதவுவதாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் கூறினர்.

மேலும், இது போன்று கடந்த வருடமும் படிப்பு, தமிழ் மொழித்திறன், விளையாட்டு, மற்றும் தனித்திறமைகளில் சாதனை படைத்த மாணவர்களையும், சிறப்பாக சேவையாற்றி வரும் தமிழாசிரியர்களையும் கெளரவித்து விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இவ்விழாவில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வெற்றிவேல், சிறப்பு விருந்தினர் மேதகு திரு. பி.எம். அம்ஸா, விழா ஒருங்கிணைப்பாளர்கள் திரு. இம்தியாஸ், திரு. மதி சிறப்புரை வழங்கியதுடன் வருங்கால தலைமுறை தமிழ், தமிழர் நலன், கல்வி, கலைத்திறமையில் சிறந்து விளங்கவேண்டும் அது வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அறிவுறுத்தினர். இறுதியாக ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு.ஷமீம் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது.