ADVERTISEMENT

துபாய் செல்ல இந்தியர்களுக்கு சிறப்பு விசாவா? இந்திய ஊடகங்கள் பரப்பிய செய்தி உண்மையா? நடந்தது என்ன?

Published: 24 Feb 2024, 7:26 AM |
Updated: 24 Feb 2024, 9:18 AM |
Posted By: admin

துபாய்க்கு சுற்றுலா செல்ல இந்தியர்களுக்காக மட்டும் பிரத்யேகமாக புதிய ஐந்தாண்டு பல நுழைவு விசாவை, துபாய் அறிமுகப்படுத்தியிருப்பதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் உட்பட இந்தியாவின் பிரபலமான பல ஆங்கில ஊடகங்களும் நேற்று முன்தினம் முதல் முக்கிய செய்தியாக இந்த செய்தியை பரப்பி வந்தன.

ADVERTISEMENT

ஆனால் இந்த செய்தி இந்திய ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இது உண்மை இல்லை எனவும் துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (Department of Economics & Tourism – DET) அதிரடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

அவ்வாறு இந்திய ஊடகங்களால் தெளிவில்லாமல் பரப்பப்பட்ட இந்த செய்தியின் உண்மை நிலவரம் என்ன? இது எவ்வாறு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது? இது குறித்து துபாய் வெளியிட்ட மறுப்பு செய்தியில் கூறப்பட்ட முக்கிய தகவல்கள் என்ன? என்பது பற்றிய விபரங்களை இங்கே தெளிவாக தெரிந்து கொள்வோம்.

ADVERTISEMENT

தற்போது இந்தியர்களுக்காக மட்டும் என பரப்பப்பட்ட இந்த விசாவானாது உண்மையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் அமீரகத்தில் நடைமுறையில் இருந்து வரும் ‘5 வருட பலநுழைவு விசா (5 year Multiple Entry Visa) ஆகும். மேலும் இந்த விசா குறிப்பிட்ட நாட்டினருக்கு மட்டும் என்றில்லாமல், அனைத்து நாட்டினருக்கும் பொதுவாகவே அமீரக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வகை விசாவாகும்.

உண்மை என்னவெனில், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘பயணக் கண்காட்சி 2024 (Travel Expo 2024)’ ஆனது இந்தியாவில் நடைபெற்றுள்ளது. அதில் துபாய் சுற்றுலாவை மேலும் ஊக்குவிப்பதற்காக துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

பொதுவாக துபாய்க்கு வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வருபவர்களில் இந்தியர்களே எப்போதும் முதலிடத்தில் உள்ளனர். துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DET) சமீபத்திய தரவுகளின்படி, 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு வருட காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து துபாய்க்கு 2.46 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

எனவே இதனை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக, நடைமுறையில் இருந்து வரும் 5 வருட மல்டிபிள் என்ட்ரி விசாவின் நன்மைகள் பற்றியும் DET அதிகாரிகள் பயணக் கண்காட்சியில் எடுத்துரைத்துள்ளனர். அதில் இந்த விசாவின் மூலம் இந்தியர்கள் துபாய்க்கு எளிதாக பயணிக்கலாம் என்றும், இந்த விசா வைத்திருப்பவர்கள் விசா பெறுவதில் ஏற்படும் கடைசி நேர சிக்கல்கள் எதுவும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்திய ஊடகங்கள் அனைத்தும் இது புதிய விசா எனவும், அதுவும் இந்தியர்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள 5 வருட பிரத்யேக விசா எனவும் தவறுதலாக புரிந்து கொண்டு முக்கிய செய்தியாக ஒரு தவறான தகவலை பரப்பிவிட்டனர். மேலும் ஒரு சிலர், இது இந்திய பிரதமரின் சாதனை எனவும் சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை உண்மையறிமால் பதிவிட்டும் வருகின்றனர்.

இருப்பினும் துபாய் உட்பட அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவருக்குமே, இந்த விசா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட விசா என்பதும், இது அனைத்து நாட்டினருக்கும் பொதுவான விசா என்பதும் நன்கறிந்த விசயமாகும். மேலும் நமது கலீஜ் தமிழ் இணையதளத்திலும் இந்த விசாவினை பற்றிய பல செய்திகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

5 வருட மல்டிபிள் என்ட்ரி விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி..??

5 வருட மல்டிபிள் என்ட்ரி விசாவின் சிறப்புகள்:

5 வருட விசாவிற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இரண்டு முதல் ஐந்து வேலை நாட்களுக்குள் வழங்கப்படும் இந்த விசா வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டவர், 90 நாட்களுக்கு தொடர்ந்து துபாயில் தங்க முடியும்.

மேலும் அவர் தொடர்ந்து துபாயில் தங்க விரும்பினால் இதே காலகட்டத்திற்கு (90 நாட்கள்) ஒருமுறை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். அதே நேரத்தில் அவர் துபாயில் தங்கும் மொத்த நாட்கள், ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது இந்த விசாவின் குறிப்பிடத்தக்க விசயமாகும்.

மேலும் இந்த விசா கடைசி நிமிட பயணத்திற்கான தடைகளை நீக்கி, நினைத்த நேரத்தில் பயணிக்க அனுமதிப்பதால் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும். முக்கியமாக, தனிநபர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும், நண்பர்களை சந்திக்கவும், வணிகம் அல்லது முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் இது பெரிதும் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel