ADVERTISEMENT

அமீரக தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தம்.. 50,000 திர்ஹம்ஸுக்கும் குறைவான வழக்கிற்கு அமைச்சகமே இனி தீர்வு காணும்..!!

Published: 16 Feb 2024, 5:55 PM |
Updated: 16 Feb 2024, 6:00 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சட்டத்தில் புதிதாக செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் படி, 50,000 திர்ஹம் அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள தொழிலாளர் தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே தீர்ப்பதற்கான அதிகார வரம்பு மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திற்கு (MoHRE) வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நேற்று (வியாழக்கிழமை) முஹைஸ்னாவில் உள்ள MoHRE தலைமையகத்தில் நடைபெற்ற ஒர்க் ஷாப்பில் கலந்து கொண்ட சட்ட ஆய்வாளர்கள் குழு, நாட்டின் புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் சட்டம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விளக்கமளித்திருந்தது. அது குறித்த விபரங்களை கீழே காணலாம்.

தொழிலாளர் தகராறுகளை எப்படி புகாரளிப்பது:

தொழிலாளர் தொடர்பான தகராறு உள்ள எந்தவொரு பணியாளரும் MoHRE அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இதை நேரிலோ, ஆன்லைனிலோ அல்லது 60056566 என்ற கால் சென்டரை அழைப்பதன் மூலமோ நீங்கள் செய்யலாம்.

ADVERTISEMENT

எடுக்கப்படும் நடவடிக்கை:

இவ்வாறு ஊழியர் அமைச்சகத்தில் புகார் அளித்ததும், அந்த வழக்கை பரிசீலனை செய்யும் அமைச்சகம் சுமுக தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அது சாத்தியமில்லை என்னும்போது, பின்வரும் இரண்டில் ஏதேனும் ஒன்று நடக்கும்:

  • தொழிலாளர் வழக்கின் மதிப்பு 50,000 திர்ஹம்ஸுக்கும் அதிகமாக இருந்தால், பிரச்சனையானது நீதிமன்றத்திற்கு செல்லும்.
  • தொழிலாளர் பிரச்சனையின் மதிப்பு 50,000 திர்ஹம்ஸுக்கும் குறைவாக இருந்தால், வழக்கு அமைச்சகத்தால் தீர்க்கப்படும்.

வழிமுறைகள்

அமைச்சகத்தால் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு விதிக்கப்படுகிறது. எனினும் தீர்ப்பு குறித்து ஆட்சேபனை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அமைச்சகத்தின் தீர்ப்பே இறுதியானது என்றாலும், மேல்முறையீடு செய்யப்பட்டால் அந்த உத்தரவை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்படும்.

ADVERTISEMENT

மேல்முறையீடு:

இரு தரப்பினருக்கும் திருப்திகரமான தீர்ப்பு இல்லை என்றால், அவர்கள் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய 15 நாட்களுக்குள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். மூன்று வேலை நாட்களுக்குள் வழக்கை பரிசீலிக்க நீதிமன்றம் ஒரு விசாரணையை நடத்தும், மேலும் அந்த வழக்கு 15 வேலை நாட்களுக்குள் தீர்ப்பளிக்கப்படும். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு இறுதி தீர்ப்பை அமைக்கும்.

கால அளவு:

அமீரகத்தில் பணியாளர்கள் தங்கள் முதலாளிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ஒரு குறிப்பிட்ட கால அளவு உள்ளது. அமீரக தொழிலாளர் சட்டத்தின்படி, விதிமீறல் நடந்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு எந்தவொரு உரிமைக்கான கோரிக்கையும் ஏற்கப்படாது. ஆகவே, ஒரு வருடத்திற்குள் முதலாளியுடனான தகராறை தாக்கல் செய்ய வேண்டும்.

நிறுத்தப்பட்ட ஊதியம்:

தகராறு தீர்க்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக, தகராறு காரணமாக தொழிலாளியின் ஊதியம் நிறுத்தப்படும் பட்சத்தில், அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு தொழிலாளியின் ஊதியத்தை வழங்குமாறு முதலாளிக்கு அமைச்சகம் உத்தரவிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel