ADVERTISEMENT

அபுதாபி சிட்டியிலிருந்து இந்து கோவிலுக்கு செல்ல புதிய பேருந்து சேவை தொடக்கம்.. விபரங்களை வெளியிட்ட ITC..!!

Published: 5 Mar 2024, 7:26 PM |
Updated: 5 Mar 2024, 7:28 PM |
Posted By: admin

அபுதாபி மற்றும் துபாய் இடையேயான முக்கிய நெடுஞ்சாலையில் அல் ரஹ்பா பகுதிக்கு அருகே அபு முரைக்காவில் (Abu Mureikha) 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அமீரகத்தில் கட்டப்பட்ட இந்த பாரம்பரிய இந்து கற்கோவிலுக்கு (BABS Mandir) பயணிகளை அழைத்துச் செல்ல அபுதாபி சிட்டியிலிருந்து புதிய பேருந்து சேவையும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி சிட்டியிலுள்ள மெயின் பஸ் டெர்மினலில் இருந்து புறப்படும் இந்த பேருந்து, முரூர் ஸ்ட்ரீட் என அழைக்கப்படும் சுல்தான் பின் சையத் ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட்டைக் கடந்து, ஹம்தான் பின் முகமது ஸ்ட்ரீட் வழியாக, அல் பஹ்யா (Al Bahya), அல் ஷஹாமா (Al Shahama) மற்றும் இந்து கோவில் வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது அல் பஹ்யா சூக் வரை இயக்கப்படும் பேருந்து எண் 201 ஆனது, அபுதாபி சிட்டிக்கு வெளியே புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள நிறுத்தங்களுடன் கூடுதலாக கோவில் வரையிலும் இயக்கப்படும். எனவே இந்த பேருந்து மூலம் அபுதாபி சிடியிலிருந்து கோவிலுக்கு செல்ல சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகலாம்.

ADVERTISEMENT

எவ்வாறாயினும், வார இறுதியில் தற்போதுள்ள பேருந்து எண் 201 ஆனது 203 ஆக மாற்றப்பட்டு கோவிலுக்கு பிரத்யேகமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் இந்த சேவையை அபுதாபியில் வசிக்கும் சமூக உறுப்பினர்கள் ஏற்கனவே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த புதிய சேவை குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், “இது அபுதாபியின் பிரபலமான தெருக்களை கோவிலுடன் இணைக்கும் ஒரு சிறந்த சேவையாகும், மேலும் வார இறுதி நாட்களில் சமூக உறுப்பினர்கள் கோவிலுக்கு செல்ல இது உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பேருந்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் அபுதாபி பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிப்பதற்கான ‘ஹஃபிளத் (Hafilat)’ கார்டு வைத்திருக்க வேண்டும். இந்த கார்டு இல்லாமல் பயணம் செய்தால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel