ADVERTISEMENT

அமீரகத்தில் 900 கைதிகளை விடுவிக்க 1.5 மில்லியன் திர்ஹம்ஸை தானமாக வழங்கும் இந்தியர்.. யார் இவர்.?

Published: 5 Mar 2024, 10:54 AM |
Updated: 5 Mar 2024, 10:58 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஒரு நபர் 1,100 திர்ஹம்ஸ், மற்றொருவர் 5,300 திர்ஹம்ஸ் மற்றும் மற்றொருவர் சுமார் 15,000 திர்ஹம்ஸ் என தாங்கள் செலுத்த வேண்டிய கடனுக்காக அமீரக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக இவ்வாறு அமீரக சிறைகளில் வாடும் இவர்களை போன்றவர்களுக்கு மீண்டும் புதிய தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்கவிருப்பதை முன்னிட்டு, அமீரகத்தில் கடனை அடைக்க முடியாமல் சிறையில் வாடும் கைதிகள் உட்பட 900 கைதிகளை சிறையிலிருந்து விடுவிக்க துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரும், பியூர் கோல்ட் ஜூவல்லர்ஸ் (Pure Gold Jewellers) நிறுவனருமான ஃபிரோஸ் மெர்ச்சன்ட் (Firoz Merchant) அவர்கள் சுமார் 1.5 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து 66 வயதான ஃபிரோஸ் அவர்கள் செய்தி ஊடகங்களிடம் கூறுகையில், “புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பலரும் கல்வி அல்லது சுகாதாரம் போன்றவற்றுக்காக தாராளமாக தங்களின் பங்களிப்பை அளிக்கின்றனர். ஆனால் சிலர் சிறையில் வாடும் சூழ்நிலைக் கைதிகளை பற்றி சிந்திப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் தொடர்ந்து பேசுகையில், “அவர்கள் கடுமையான குற்றவாளிகள் இல்லை, சூழ்நிலை காரணமாக தங்கள் கடன்களை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டு அவர்களுக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை வழங்குவதை எனது இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அவரது ‘Forgotten Society’ என்கிற முன்முயற்சியின் மூலம், கைதிகளின் கடன்களைத் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் வீடு திரும்புவதற்கும் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கும் அவர்களுக்கான விமானக் கட்டணத்தையும் ஃபிரோஸ் அவர்கள் வழங்கி வருகிறார்.

இவ்வாறு கடந்த 16 ஆண்டுகளில், 20,000 க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க முயற்சி எடுத்ததாகவும், நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் பணியாற்றும் காவல்துறை இயக்குநர்களுடன் இதற்காக அவர் நெருக்கமாக ஒத்துழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதாவது, இந்திய தொழிலாளி ஒருவர் கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடத்தில் பணிபுரியும் போது, ​​கைதவறி சுத்தியலைக் கீழே விட்டதால், அங்கிருந்த மற்றொரு நபர் பரிதாபமாக பலியாகியுள்ளார், அதனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 70,000 திர்ஹம்ஸை இழப்பீடு பணமாக (Blood Money) வழங்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது, ஆனால் அந்தத் தொகையை அவரால் செலுத்த முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேற்கூறிய வழக்கை துபாயின் சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் அவர்கள், ஃபிரோஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உடனடியாக, இந்த வழக்கில் தலையிட்ட ஃபிரோஸ் அவர்கள், கைதியின் கடனை தீர்த்து சிறையிலிருந்து விடுவித்தது மட்டுமில்லாமல், கைதி தனது குடும்பத்திற்காக ஷாப்பிங் செய்ய 3,000 திர்ஹம்சையும் அவருக்கு வழங்கியுள்ளார்.

இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த ஃபிரோஸ் மெர்சன்ட், மும்பையின் மிகவும் நெரிசலான சேரி பகுதியில் ஒரு சிறிய வீட்டில் பத்து பேருடன் வசித்து வந்தவராவார். 1980ல், தனது திருமனத்திற்கு பிறகு துபாய்க்கு சுற்றுலா வந்த ஃபிரோஸ் இங்கு நகை வியாபாரம் செய்ய முடிவெடுத்துள்ளார். அவரது நீண்ட கால விடாமுயற்சியின் விளைவாக இன்று, 12 நாடுகளில் 150 க்கும் மேற்பட்ட நகைக் கடைகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக பங்களிப்புகள்:

அமீரக அரசாங்க அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பிற்காக நன்றியை தெரிவித்த ஃபிரோஸ், இந்த முக்கியமான பணியை தன்னிடம் ஒப்படைத்ததற்காக துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யானுக்குக் தான் கடமைப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அபுதாபி அரசாங்கத்தின் சமூக பங்களிப்புகளைப் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ தளமான Ma’an, கைதிகளின் மனிதாபிமான வழக்குகள் திட்டத்திற்கு ஆதரவாக இந்த ஆண்டு பியூர் கோல்டு நகைக் கடை நிறுவனரான ஃபிரோஸ் அவர்களிடமிருந்து 600,000 திர்ஹம்ஸ் நன்கொடை பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், ஃபிரோஸின் இந்த நிதி பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த Ma’an நிறுவனத்தின் தன்னார்வப் பணிப்பாளர் ஃபதேமா அல் மர்சூக்கி, இந்த முன்முயற்சி தனிநபர்களை அவர்களது சொந்த நாடுகளில் உள்ள அவர்களது குடும்பங்கள் மற்றும் உறவினர்களுடன் மீண்டும் இணைக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel