ADVERTISEMENT

அமீரக அரசின் புதிய அறிவிப்பு.. அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம்..!!

Published: 19 Mar 2024, 11:02 AM |
Updated: 19 Mar 2024, 11:27 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அனைத்து தனியார் துறை ஊழியர்களும், அதேபோன்று வீட்டுப் பணியாளர்களும் கட்டாய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (Helath Insurance Scheme) கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள் என்ற புதியதொரு அறிவிப்பை அமீரக அரசு நேற்று (மார்ச் 18) வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் அதிகம் பேர் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களாவர். எனவே, நாட்டில் பணிபுரியக்கூடிய தனியார் துறை ஊழியர்களும் தரமான, சுகாதார மருத்துவ சேவையை அணுகுவதை உறுதி செய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளாதகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்த இது தொடர்புடைய விழிப்புணர்வு பிரச்சாரங்களும், திட்டங்களும் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் (MoHRE) விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டிற்குள் ஏற்கனவே மருத்துவ காப்பீடு இல்லாத தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கான திட்டத்திற்கு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த அறிவிப்பானது தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவக் காப்பீட்டுக் கொள்கையின்படி, முதலாளிகளே தங்கள் தொழிலாளர்களின் ரெசிடென்சி அனுமதிகளை வழங்கும்போது அல்லது புதுப்பிக்கும்போது அவர்களின் மருத்துவ காப்பீட்டிற்கான கவரேஜுக்கு பணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தைப் பொருத்தவரை தற்போது ​​அபுதாபி மற்றும் துபாயில் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு உடல்நலக் காப்பீடு பெறுவதைக் கட்டாயமாக்கும் சட்டங்கள் உள்ளன. குறிப்பாக, அபுதாபியில், கட்டாய காப்பீட்டுத் திட்டம் ஊழியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவசியமாகும்.

நாட்டின் இரண்டாவது கட்டாய காப்பீட்டு திட்டம்:

அமீரக அரசால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது கட்டாயக் காப்பீடு திட்டமாகும். முன்னதாக கடந்த ஆண்டில், தொழிலாளர்கள் வேலை இழப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் வகையில் வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டம் காட்டாயமாக்கப்பட்டது.

இது தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளை அவர்கள் பணிபுரியும் நிறுவனம் திவாலாகும் போது அல்லது நிதிச் சிக்கலை சந்திக்கும் போது தொழிலாளர்களை பாதுகாக்கிறது. இதுவரை, தனியார் மற்றும் மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த 7.2 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று திங்கள்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமீரக துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அவர்கள், நாட்டில் உள்ள 98.8 சதவீத பணியாளர்கள் தொழிலாளர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “இன்று, MoHREக்கான புதிய கட்டமைப்பை நாங்கள் அங்கீகரித்துள்ளோம், இதில் நாட்டில் தொழிலாளர் சந்தைக்கான ஒருங்கிணைப்பு குழுவை நிறுவுவது, அதன் ஸ்திரத்தன்மையை பராமரிக்க போட்டித்தன்மையை மேம்படுத்துவதும் அடங்கும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம், தொழிலார்கள்தான் பொருளாதாரத்தில் முக்கியமானவர்கள் என்றும், அவர்களின் கவலைகளைக் கண்காணித்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது நமது தேசியப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு இன்றியமையாத கூறுகளாகும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel