ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித ரமலான் மாதம் பிறை பார்ப்பதன் அடிப்படையில் நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள ஏராளமான சில்லறை விற்பனையாளர்களும் பல்வேறு தயாரிப்புகளுக்கு அதிரடியான தள்ளுபடியையும் அறிவித்து வருகின்றனர்.
இருப்பினும், ஒரு சில விற்பனையாளர்கள் பண்டிகை காலத்தைப் பயன்படுத்தி சில பொருட்களின் விலைகளை உயர்த்தி விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். எனவே, இந்த புனித மாதத்தில் தள்ளுபடிகள் மற்றும் விலை உயர்வுகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்ட ஒன்பது அடிப்படை பொருட்களின் விலைகளை அதிகாரிகளின் முன் அனுமதியின்றி உயர்த்த அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வகையில் அமீரகத்தின் நுகர்வோர் பொருட்களுக்கான விலை நிர்ணயக் கொள்கையின் படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தடை செய்யப்பட்டுள்ளது. அவை,
- சமையல் எண்ணெய்
- முட்டை
- பால்
- அரிசி
- சர்க்கரை
- கோழி
- பருப்பு வகைகள்
- ரொட்டி
- கோதுமை
இது குறித்து அமீரக பொருளாதார அமைச்சகத்தின் (MoE) கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல் துறைக்கான உதவி துணைச் செயலாளர் அப்துல்லா சுல்தான் அல் ஃபேன் அல் ஷம்சி (Abdullah Sultan Al Fan Al Shamsi) கூறுகையில், இந்த விலை நிர்ணயக் கொள்கை சந்தை விலைக் கட்டுப்பாட்டின் முக்கிய தூண் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இந்த பண்டிகை மாதத்தில் அமீரகக குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைப்பார்கள் மற்றும் ஷாப்பிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், குடியிருப்பாளர்கள் தங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய தங்கள் ரசீதுகளை பத்திரமாக வைத்திருக்குமாறு அல் ஷம்ஷி நினைவூட்டலை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், “குடியிருப்பாளர்கள் தெரிவிக்கும் நுகர்வோர் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை அமைச்சகத்தின் சமூக ஊடக பக்கங்களின் மூலம் தெரிவிக்க விரும்புகிறோம். இது புகார்களை பதிவு செய்யவும், நுகர்வோர் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வணிக நடைமுறைகளைப் புகாரளிக்கவும் உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த புனித மாதத்தில் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், இது போன்ற மீறல்கள் குறித்து 8001222 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து அமைச்சகத்திடம் புகாரளிக்கவும் வாடிக்கையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel