ADVERTISEMENT

பயணிகளுக்கு நற்செய்தி: அபுதாபி-திருச்சி இடையே கூடுதல் விமானத்தை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. டிக்கெட் புக்கிங்கும் தொடக்கம்..!!

Published: 20 Apr 2024, 12:49 PM |
Updated: 20 Apr 2024, 2:15 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே பல விமான சேவைகளை இயக்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு விமான சேவையை இயக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கும் திருச்சிக்கும் இடையே இந்த கூடுதல் விமானம் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுவாகவே அபுதாபியில் இருந்து சென்னைக்கு பல நேரடி விமான சேவைகள் இருந்த போதிலும் தமிழகத்தின் மற்ற விமான நிலையங்களுக்கு போதுமான விமான சேவை இல்லை. தற்போது அபுதாபியிலிருந்து திருச்சிக்கு வாரத்திற்கு ஒரு விமான சேவையை மட்டுமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கி வருகிறது.

இதனால் அபுதாபியில் வசிக்கக்கூடிய தமிழகத்தின் தென்பகுதிகளை சேர்ந்தவர்கள், மதுரை அல்லது திருச்சிக்கு செல்ல துபாய் அல்லது ஷார்ஜா வழியாகவே பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. மேலும் அங்கிருந்து வரும் பயணிகளும் துபாயில் இறங்கி பேருந்து அல்லது டாக்ஸி மூலமாகவே அபுதாபிக்கு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த கூடுதல் விமான சேவையானது திருச்சி மற்றும் அபுதாபி இடையே பயணிக்கும் நபர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த கூடுதல் விமான சேவையானது எதிர்வரும் மே 17ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் திருச்சி விமான நிலையத்திற்கும் அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே மே 17 முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு இரண்டு நாட்கள் நேரடி விமான சேவைகள் பயண்பாட்டில் இருக்கும்.

ADVERTISEMENT

அத்துடன், இந்த விமானமானது திருச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு அபுதாபியை வந்தடையும். அதன் பின்னர் இங்கிருந்து இரவு 9.45 மணிக்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு திருச்சியை சென்றடையும். மேலும் இந்த கூடுதல் விமான சேவைக்கான டிக்கெட் புக்கிங்கை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் இந்த அறிவிப்பானது பயணிகளுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், அபுதாபியிலும் தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் திருச்சி அல்லது மதுரை விமான நிலையங்களுக்கு அபுதாபியிலிருந்து தினசரி நேரடி விமான சேவையை இயக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel