ADVERTISEMENT

அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்யுமா..? தேசிய வானிலை மையம் வெளியிட்ட வானிலை அறிக்கை..!!

Published: 17 Apr 2024, 4:08 PM |
Updated: 17 Apr 2024, 4:08 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் பெய்த கனமழையினால், அமீரகத்தில் உள்ள விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், சாலைகள், தெருக்கள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டு காணும் இடமெங்கும் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

ADVERTISEMENT

அமீரகத்தின் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை மொத்த அமீரகத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சேதமடைந்ததுடன், குடியிருப்பு கட்டிடங்களிலும் மரைநீர் புகுந்ததால் மின்சாரம், இன்டர்நெட் மற்றும்  குடிநீர் இல்லாமல் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று பெய்த கனமழை குறித்து அமீரகத்தின் தேசிய வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் பெய்த அதிகளவிலான மழைப்பொழிவை “விதிவிலக்கானது” மற்றும் “வரலாற்று நிகழ்வு” என்று குறிப்பிட்டதுடன், அல் அய்னில் 24 மணி நேரத்திற்குள் 254 மிமீ மழை பதிவானதாகவும் NCM கூறியுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், அல் அய்ன் தவிர அமீரகத்தில் குறைந்தபட்சம் மேலும் நான்கு இடங்களில் 200 மிமீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அமீரகத்தை பொருத்தவரை ஒரு ஆண்டில் சராசரியாக 100 மிமீ மழை பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் NCM வெளியிட்ட கடைசி வானிலை புதுப்பிப்பின்படி, இன்று புதன்கிழமை மதியம் வரை கடலோரப் பகுதிகளில் சில வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்றும் பின்னர் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் மேகங்கள் படிப்படியாகக் குறையும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

அத்துடன், NCM வெளியிட்ட அமீரகத்திற்கான ஐந்து நாள் வானிலை அறிக்கையின்படி, இன்று பெய்யும் மழைக்குப் பிறகு அடுத்த ஐந்து நாட்களுக்கு, அதாவது வரும் ஏப்ரல் 21ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 18) முதல் முதல் நாட்டில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறியதுடன், அடுத்த ஐந்து நாட்களுக்கு சில பகுதிகள் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சனிக்கிழமை வரை மூடுபனிக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் NCM அறிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.