ADVERTISEMENT

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”.. மீண்டும் முழுத் திறனில் செயல்படத் தொடங்கிய துபாய் ஏர்போர்ட்..!!

Published: 23 Apr 2024, 3:49 PM |
Updated: 23 Apr 2024, 3:54 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் 75 ஆண்டுகள் இல்லாதளவு கடுமையான மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக துபாய் விமான நிலையமானது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், துபாய் விமான நிலையம் தற்பொழுது முழு திறனுடன் அதன் வழக்கமான அட்டவணயை பின்பற்றி இயங்கி வருகின்றது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் “துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) நேற்று (திங்கள்கிழமை) முதல் அதன் வழக்கமான விமான அட்டவணையை இயக்குகிறது. அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 1,400 விமான சேவைகளை வழங்குகிறது” என்று துபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.

மேலும் “விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் தண்ணீர் தேக்கம் முற்றிலும் இல்லை. எங்கள் மனிதவளம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இடங்கள் மீண்டும் வழக்கம் போல் செயல்படுகின்றன” என்று கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் துபாயில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் அதன் பின்விளைவுகள் காரணமாக மொத்தம் 2,155 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் 115 விமானங்கள் திருப்பி விடப்பட்டன என்றும் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கனமழையால் துபாய் விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் துபாய் விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகளை மீட்டெடுக்க சிறிது நேரம் எடுக்கும் என்று விமான நிலையம் ஒரு அறிக்கையை முன்னதாக வெளியிட்டது. மேலும் கடந்த ஏப்ரல் 19ம் தேதியன்று DXB-ல் இருந்து 31 விமானங்கள் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) விமான நிலையத்திற்கு மாற்றி விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து DXB மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) ஆகிய இரண்டு விமான நிலையங்களும் செயல்பாடுகளை மீட்டெடுக்கவும் பயணிகளுக்கு ஆதரவளிக்கவும் விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் 24 மணி நேரமும் ஒன்றாக வேலை செய்தனர் என கூறப்பட்டுள்ளது.

இத்தகைய பாதிப்பை அனுபவித்ததற்குப் பிறகு விமான நிலையத்தை மீண்டும் வழக்கமாக இயக்குவது சாதாரண விஷயம் அல்ல என்று கூறிய கிரிஃபித்ஸ் “விமான அட்டவணைகளை திருத்தம் செய்வதற்கும், மனிதவளத்தை அதிகரிப்பதற்கும் மற்றும் விமான சேவை பாதிப்பால் இடையூறுகளை சந்தித்த அனைவரையும் கவனிப்பதற்கும் நாங்கள் எங்கள் விமான கூட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டியிருந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “DXB மற்றும் DWC ஆகிய இரு விமான நிலையங்கள் முழுவதும் 75,000 உணவுப் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு, சிக்கித் தவிக்கும் பயணிகளும் கவனிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் தற்பொழுது பேக்கேஜ் பேக்லாக்கைச் செயலாக்குவது உட்பட சில சவால்கள் உள்ளன” என்று கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தெரிவிக்கையில் “நாங்கள் எங்கள் சேவை கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், ஆனால் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்பதை அறிவோம், நாங்கள் இதைச் செய்யும்போது பயணிகளின் பொறுமைக்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறோம்” என்று கூறியுள்ளார். 

வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் போது, ​​தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கவும், சுமூகமான செயல்பாடுகளை எளிதாக்கவும், துபாய் ஏர்போர்ட் செல்லும் பயணிகள் தங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு மூன்று மணிநேரம் முன்னதாகவே தங்கள் டெர்மினலுக்கு வர வேண்டும் என விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel