அமீரக செய்திகள்

UAE: பிரபல இந்திய மசாலா பிராண்டுகளில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்.. துபாய் முனிசிபாலிட்டி அறிக்கை வெளியீடு..!!

உலகளவில் பிரபலமான சில இந்திய மசாலாப் பொருட்களில் புற்றுநோய்களை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இது பற்றி அமீரகத்தின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள் எனவும், இது குறித்து அவர்கள் விசாரித்து வருவதாகவும் துபாய் முனசிபாலிட்டி உறுதிப்படுத்தியுள்ளது.

கேள்விக்குரிய குறிப்பிட்ட இந்திய மசாலா பிராண்டுகளில், உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எத்திலீன் ஆக்சைடின் தடயங்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இது மிதமான அளவுகளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொருளாகும். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களிலும் நாங்கள் செய்யும் வழக்கமான சோதனையானது கவலைக்குரியதாக இருக்க வேண்டிய எதையும் வெளிப்படுத்தவில்லை” என தெரிவித்துள்ளது.

“இருப்பினும், உலகளாவிய அறிவிப்பைப் பற்றி நாங்கள் முழுமையாக அறிந்துள்ளோம், மேலும் நினைவுபடுத்துதல்கள் மற்றும் வழக்கமான நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும். நாங்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன் மற்ற படிகளில் இடர் மதிப்பீடு மற்றும் ஆய்வக சோதனைகளைச் செய்கிறோம். பொது சுகாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக எந்தவொரு மீறலும் கவனிக்கப்படும்,.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தீங்கு விளைவிக்கும் பொருட்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவு மற்றும் அத்தகைய உரிமைகோரல்களைப் பற்றிய விசாரணைகள் அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் (MOCC) கையாளப்படுகின்றன எனவும் துபாய் முனிசிபாலிட்டி குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், மெட்ராஸ் கர்ரி பவுடர் (MDR), எவரெஸ்ட் (Everest) ஆகிய பிரபல இந்திய பிராண்டுகளின் நான்கு மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருளான எத்திலீன் ஆக்சைடு அதிகளவில் இருப்பதைக் கண்டறிந்து தடை விதித்தனர். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் கொல்ல மசாலாப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வேதிப்பொருளானது புற்றுநோயை உண்டாக்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பிராண்டுகளில் ஒரு நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் கடுமையான உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தரங்களை எங்கள் நிறுவனம் முறையாக கடைபிடிப்பதாகக் கூறியுள்ளது. அத்துடன், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும் (FSSAI) இந்தச் செய்திக்குப் பிறகு தனது சொந்த விசாரணையையும் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உட்பட 527 இந்தியப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் இவை செப்டம்பர் 2020 மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (EFSA) நடத்திய சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!