ADVERTISEMENT

வேறு இடத்திற்கு மாறப்போகும் துபாய் சர்வதேச விமான நிலையம்.. புதிய ஏர்போர்ட்டிற்கு ஒப்புதல் அளித்த துபாய் ஆட்சியாளர்..!!

Published: 28 Apr 2024, 7:56 PM |
Updated: 29 Apr 2024, 6:05 PM |
Posted By: admin

உலகளவில் அதிகளவிலான பயணிகளை கையாளுவதில் துபாய் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதற்கேற்ப வெளிநாடுகளிலிருந்து துபாய் வரும் மற்றும் துபாய் வழியாக வேறு நாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளை கையாள டெர்மினல் 1, டெர்மினல் 2 மற்றும் டெர்மினல் 3 என மூன்று முனையங்கள் துபாயில் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் துபாயின் மையப்பகுதியில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், வரும் அடுத்த 10 ஆண்டுகளில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் படிப்படியாக புதிய விமான நிலையத்திற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

துபாயில் செயல்பட்டு வரும் சரக்கு விமானப் போக்குவரத்திற்கான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில், புதிய பயணிகள் முனையம் கட்டுவதற்கான வடிவமைப்பு துபாய் ஆட்சியாளரால் இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

துபாய் ஏவியேஷன் கார்ப்பரேஷனின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, 128 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் இந்த புதிய முனையத்தின் கட்டுமானம் உடனடியாக தொடங்கப்படும் என்றும், இந்த விமான நிலையம் மொத்தம் 70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 400 விமான வாயில்கள் மற்றும் ஐந்து இணையான ஓடுபாதைகளைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த புதிய விமான நிலையம் கட்டிமுடிக்கப்படும் போது, இது தற்போதைய துபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) விட ஐந்து மடங்கு பெரியதாகவும். விமானப் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படாத பல தொழில்நுட்பங்களையும் இந்த புதிய விமான நிலையம் பயன்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
புதிய பயணிகள் முனையத்தின் மாதிரி புகைப்படம்

இது குறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் சமூக ஊடக தளமான X இல் அறிவிப்பை வெளியிட்டதுடன், 260 மில்லியன் பயணிகளை கையாளும் அளவிற்கு அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில், “உலகளாவிய விமானத் துறையின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு துபாய் சர்வதேச விமானத் துறையை வழிநடத்தும் ஒரு கட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். நாங்கள் தலைமுறைகளுக்கு ஒரு புதிய திட்டத்தை உருவாக்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், “புதிய திட்டங்களின் மூலம் எங்கள் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்கிறோம், இதனால் உலகின் முன்னோடியான விமான நிலையம், துறைமுகம், நகர்ப்புற பெருநகரம் மற்றும் புதிய கலாச்சார மையமாக துபாய் இருக்கும்.” என்றும் துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel